‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 8 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 8அடுத்த நாள் ›
குடும்பம்

1யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

2கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.

3ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:

4நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.

5அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச் சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.

6அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.

7உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.

8கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.

9யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.

10கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

11அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

12கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான்.

13அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.

14இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

15பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.

16அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள்.

17ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.

18அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள்.

19நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

20யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.

21ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.

22அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

23அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.

24அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.

25அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.

26அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்.

27சூரியன் அஸ்தமிக்கிற வேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களை கெபியின் வாயிலே அடைத்தார்கள்.

28அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.

29மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான்.

30கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.

31லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினான்.

32கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்.

33அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும், ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.

34லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி,

35அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.

36பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி,

37அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம்பண்ணினான்.

38பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி,

39அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

40இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,

41காதேஸ்பர்னேயா துவக்கிக் காத்சா மட்டும் இருக்கிறதையும் கிபியோன் மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.

42அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

43பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.

சங்கீதம் 142-143

முழு அதிகாரம் ›
சங்கீதம் 142

1கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

2அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.

3என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.

4வலதுபுறமாய்க் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.

5கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.

6என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.

7உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

சங்கீதம் 143

1கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.

2ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.

3சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்கு முன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.

4என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.

5பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.

6என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா)

7கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.

8அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

9கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.

10உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

11கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.

12உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.

தனிவாசிப்பு

1இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.

2நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.

3யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.

4யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.

5தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.

6சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன்.

7உன் தேசத்தைப் பாழாக்கிவிடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளை சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

8இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.

9அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோகும்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

10அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.

11வனாந்தரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும் என்று அக்காலத்திலே இந்த ஜனத்தோடும் எருசலேமோடும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.

12இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களோடே நியாயம் பேசுவேன்.

13இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கிறது; அவன் குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே.

14எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரமநினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.

15தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது.

16ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.

17அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப் போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.

19என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக்கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.

20நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.

21நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.

22என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

23பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

24பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.

25பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.

26பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.

27தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

28இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம்பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுப் திரும்புவதும் இல்லை.

29குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.

30பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்.

31கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.

1அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.

2இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:

3நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.

5இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.

6என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.

7இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

8உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

9உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

10இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.

12உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?

13அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

15உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.

16அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.

17அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

18பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

20ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

21அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.

22அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.

23எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

24அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

25கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.

26அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.

27அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

28அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.

29அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.

30அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.

31நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

32அப்பொழுது அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

33நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,

34அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

35நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com