1ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்திற்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும்,
2வடக்கேயிருக்கிற மலைகளிலும் கின்னரோத்துக்குத் தெற்கேயிருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடத்திற்கும்,
3கிழக்கேயும், மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும், மலைகளிலிருக்கிற எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியரிடத்திற்கும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா சீமையிலிருக்கிற ஏவியரிடத்திற்கும் ஆள் அனுப்பினான்.
4அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடுங்கூடப் புறப்பட்டார்கள்.
5இந்த ராஜாக்களெல்லாரும் கூடி, இஸ்ரவேலோடே யுத்தம்பண்ண வந்து, மேரோம் என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங்கினார்கள்.
6அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார்.
7யோசுவாவும், அவனோடேகூட யுத்த ஜனங்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில் வந்து, அவர்கள்மேல் விழுந்தார்கள்.
8கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீம்மட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.
9யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.
10அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது.
11அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி, சங்காரம்பண்ணினார்கள்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.
12அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயக்கருக்கினால் வெட்டி, கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களைச் சங்காரம்பண்ணினான்.
13ஆனாலும் தங்கள் அரணிப்போடே இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.
14அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருள்களையும் இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்துத் தீருமட்டும் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.
15கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.
16இந்தப் பிரகாரமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவக்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால் காத்மட்டுமுள்ள அந்த முழுத்தேசமாகிய மலைகளையும், தென்தேசம் யாவையும், கோசேன் தேசத்தையும் சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,
17அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.
18யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.
19கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத் தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்.
20யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது.
21அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் சகல மலைகளிலும் இருந்த ஏனாக்கியரை நிக்கிரகம்பண்ணி, அவர்களை அவர்கள் பட்டணங்களோடும் கூடச் சங்கரித்தான்.
22இஸ்ரவேல் புத்திரரின் தேசத்தில் ஏனாக்கியர் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும் மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள்.
23அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.
1என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
2அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.
3கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
4மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
5கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.
6மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.
7உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்.
8மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
9கர்த்தாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
10நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர்.
11மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
12அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கி வளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.
13எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.
14எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.
15இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
1நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
2அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே.
3கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
4அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
5நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்கள் என்று சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
6ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
7இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி, வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள்.
8அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
9இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.
11இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம் பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
13தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
14ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.
15இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
16திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
17அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.
18ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து: நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக.
20நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால்,
21கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.
22எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
23இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள்.
24அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
25உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
26குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
27குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.
28கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.
29இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது.
31தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்ன செய்வீர்கள்?
1இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார்.
2திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
3அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
4அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
5இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
6இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
7அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
8அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.
9ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றி புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.
11அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
12தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
13அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
15அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்.
16அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.
17அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
18அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;
19உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.
20அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
21அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
23அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
26இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
27அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
28அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
29என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
30ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com