‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூன் 16 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூன் 16அடுத்த நாள் ›
குடும்பம்

1உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,

2உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள் மட்டும் அளப்பார்களாக.

3கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,

4உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள்.

5உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும்.

6கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர் எல்லாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:

7எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை;

8கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும்.

9இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.

10நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,

11சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,

12அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து,

13தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.

14அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.

15இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,

16தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.

17வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.

18தன் தகப்பன் சொல்லையும், தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும்போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,

19அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:

20எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

21அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.

22கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,

23இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது; அந்நாளிலேதானே அதை அடக்கம் பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

சங்கீதம் 108-109

முழு அதிகாரம் ›
சங்கீதம் 108

1தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்.

2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.

3கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.

5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

6உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.

7தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

9மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.

10அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?

11எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?

12இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.

13தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

சங்கீதம் 109

1நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.

2துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.

3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.

4என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.

6அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.

7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.

8அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.

9அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.

10அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.

11கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.

12அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமலும்போவார்களாக.

13அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.

14அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.

15அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.

16அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போகும்.

18சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.

19அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.

20இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்.

21ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

22நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.

23சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.

24உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.

25நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.

26என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.

27இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.

28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.

29என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

30கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.

31ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.

தனிவாசிப்பு

1இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீருற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.

2அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள்.

3பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.

4நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன்.

5ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்குஅறிவித்து, அவைகள் வராததற்கு முன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.

6அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.

7அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை.

8நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம் பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்று பெயர் பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.

9என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன்.

10இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

11என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.

12யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.

13என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.

14நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?

15நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்.

16நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.

17இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

18ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.

19அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்.

20பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.

21அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.

22துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 18

முழு அதிகாரம் ›

1இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

2அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.

3அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.

4பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

5அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.

6அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.

7அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.

8ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.

9அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,

10அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

11பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,

12சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும்,

13இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.

14உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.

15இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;

16ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

17மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரைபண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,

18அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,

19தங்கள் தலைகள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.

20பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.

21அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய எந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.

22சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

23விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.

24தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com