‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூன் 17 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூன் 17அடுத்த நாள் ›
குடும்பம்

1உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல் இராமல், அதை உன் சகோதரனிடத்துக்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.

2உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவருமட்டும் உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.

3அப்படியே அவன் கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் வஸ்திரத்தைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகலாகாது.

4உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.

5புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

6வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.

7தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.

8நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும்.

9உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.

10மாட்டையும், கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.

11ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.

12நீ தரித்துக்கொள்ளுகிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக.

13ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்த பின்பு அவளை வெறுத்து:

14நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள் மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;

15அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.

16அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,

17நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.

18அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,

19அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

20அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,

21அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

22புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.

23கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தால்,

24அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

25ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.

26பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது.

27வெளியிலே அவன் அவளைக் கண்டுபிடித்தான்; நியமிக்கப்பட்ட பெண் அப்பொழுது கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற்போயிற்று.

28நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,

29அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

30ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியைச் சேரலாகாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தலாகாது.

சங்கீதம் 110-111

முழு அதிகாரம் ›
சங்கீதம் 110

1கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

2கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.

3உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.

4நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.

5உம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.

6அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாயிருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.

7வழியிலே அவர் நதியில் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.

சங்கீதம் 111

1அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.

2கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.

3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.

4அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.

5தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.

6ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

7அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.

8அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.

9அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

10கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

தனிவாசிப்பு

1தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.

2அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.

3அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.

4அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.

5யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத் தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.

6யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.

7இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.

8பின்னும் கர்த்தர்: அநுக்கிரககாலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;

9கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.

10அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.

11என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும்.

12இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்.

13வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்.

14சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.

15ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

16இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

17உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னை விட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.

18உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

19அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.

20பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச்சொல்லுவார்கள்.

21அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.

22இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

23ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்.

24பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?

25என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்.

26உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 19

முழு அதிகாரம் ›

1இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.

2தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.

3மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.

4இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

5மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.

6அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

7நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்.

8சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

9பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

10அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.

11பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

12அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

13இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

14பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.

15புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

16ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

17பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:

18நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.

19பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.

20அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

21மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com