‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூன் 19 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூன் 19அடுத்த நாள் ›
குடும்பம்

1ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.

2அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.

3அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும்,

4அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.

5ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.

6திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகுவாங்குவதுபோலாகும்.

7தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயந்தேடி, அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

8குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.

9நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.

10பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம்.

11வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.

12அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரை செய்யாமல்,

13அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்து விடவேண்டும்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.

14உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.

15அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

16பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.

17நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை அடகாக வாங்காமலும் இருந்து,

18நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

19நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

20நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்து விட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக;

21நீ உன் திராட்சப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

22நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

சங்கீதம் 114-115

முழு அதிகாரம் ›
சங்கீதம் 114

1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,

2யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்யமுமாயிற்று.

3கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;

6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?

7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

8அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

சங்கீதம் 115

1எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.

2அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்?

3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.

4அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

8அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

9இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

10ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

11கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

12கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.

13கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.

14கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.

15வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

16வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

17மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.

18நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.

தனிவாசிப்பு

1நீதியைப் பின்பற்றி கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.

2உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.

3கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

4என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்.

5என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.

6உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போகும்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.

7நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.

8பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.

9எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

10மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?

11அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

12நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?

13இடுக்கண் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண் செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே?

14சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.

15உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.

16நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்லுவதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.

17எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.

18அவள் பெற்ற புத்திரரெல்லாரிலும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த குமாரரெல்லாரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.

19இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல் செய்வேன்?

20உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன் தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.

21ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறிகொண்டவளே, நீ கேள்.

22கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.

23உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 21

முழு அதிகாரம் ›

1பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.

2யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

3மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

4அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

5சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாத்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

6அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

8பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

9பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

10பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

11அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

12அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

13வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.

14நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

15என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.

16அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.

17அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.

18அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.

19நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

20ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.

21பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

22அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

23நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

24இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

25அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.

26உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

27தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com