1விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
2வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
3அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
4நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும்.
5உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.
6நீ உன் ஆயுள் நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே.
7ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய்.
8மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாம்.
9நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக.
10இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல்,
11சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன்.
12நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்க வேண்டும்.
13உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்து போனதை மூடிப்போடக்கடவாய்.
14உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது.
15தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.
16அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்குச் சம்மதியான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம்.
17இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.
18வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
19கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும், ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டிவாங்காயாக.
20அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.
21நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.
22நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
23உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.
24நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திருப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது.
25பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.
1அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
2அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
3ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.
5இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
8அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
10துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
1அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
3சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
5உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
6அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
8அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
1கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
2நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.
3நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.
4இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
5கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
6அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
7கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
8என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
9இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
10உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.
11இதோ, நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.
1ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
2பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
3அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
4அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
5மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
6முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
7அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
9அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
11பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
12மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
13சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
14அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
15ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com