‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூன் 21 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூன் 21அடுத்த நாள் ›
குடும்பம்

1உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் வாசம்பண்ணும்போது,

2உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,

3அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.

4அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன்.

5அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப் போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.

6எகிப்தியர் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது,

7எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,

8எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி,

9எங்களை இவ்விடத்துக்கு அழைத்து வந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.

10இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டு வந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,

11நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.

12தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,

13நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும், பரதேசிக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.

14நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; இழவுக்காரியத்துக்காக அதில் ஒன்றும் படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.

15நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.

16இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும் பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டைளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.

17கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும், அவர் கற்பனைகளையும், அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.

18கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,

19நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.

சங்கீதம் 117-118

முழு அதிகாரம் ›
சங்கீதம் 117

1ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.

2அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.

சங்கீதம் 118

1கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.

3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.

5நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.

6கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?

7எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.

8மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

9பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

10எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்.

14கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

16கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

17நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.

18கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.

20கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.

21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.

22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

23அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

24இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

25கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.

26கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

27கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.

28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.

29கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

தனிவாசிப்பு

1எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

2இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

3அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

4மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

5நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

7அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

8இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

9துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

10கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

11அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

12அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

1ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:

2ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

3யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

4ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

5சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

6ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

7சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;

8ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;

9உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;

10எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;

11பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

12பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபின்பு எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;

13சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;

14ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;

15எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

16யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.

17இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

18இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

19அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

20அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

21அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

22தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

23அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.

24யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

25அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com