‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூன் 7 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூன் 7அடுத்த நாள் ›
குடும்பம்

1நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.

2உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும்,

3அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும்,

4எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,

5நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும் அவர் உங்களுக்கு வனாந்தரத்தில் செய்ததையும்,

6பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

7கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது.

8ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,

9நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.

10நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

11நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத்தண்ணீரைக் குடிக்கும் தேசம்;

12அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

13நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால்,

14நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி,

15மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார்.

16உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

17இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.

18ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும்படிக்கு,

19நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

20அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.

21அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக.

22நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,

23கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள்.

24உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐபிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம் வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.

25உங்கள்முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரப்பண்ணுவார்.

26இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.

27இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,

28எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.

29நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.

30அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது?

31உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரிப்பதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள்.

32ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.

சங்கீதம் 95-96

முழு அதிகாரம் ›
சங்கீதம் 95

1கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.

3கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.

4பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.

5சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.

6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

7அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.

8இன்று அவருடைய சத்தத்தைக்கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

9அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.

10நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,

11என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

சங்கீதம் 96

1கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.

2கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.

3ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.

4கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

5சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.

6மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.

7ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

8கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.

9பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.

10கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும் அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.

11வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.

12நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.

13அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

தனிவாசிப்பு

1அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.

2எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.

3அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள் எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.

4அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

5அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தையைக் கேளும்.

6இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

7நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

8அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 9

முழு அதிகாரம் ›

1ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.

2அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.

3அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.

4பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.

5மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.

6அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போகும்.

7அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.

8அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.

9இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஒடுகிற அநேகங்குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.

10அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.

11அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயுபாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

12முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.

13ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி,

14எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.

15அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.

16குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபதுகோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.

17குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.

18அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.

19அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.

20அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை;

21தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com