1உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:
2நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,
3அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.
4உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்,
5உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,
6அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,
7அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.
8இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
9உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.
10நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்கள் சத்துருக்களையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறப்பண்ணுகிறதினால் நீங்கள் சுகமாய் வசித்திருக்கும்போதும்,
11உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,
12உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.
13கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
14உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில் மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.
15ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம்.
16இரத்தத்தை மாத்திரம் புசிக்க வேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.
17உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.
18உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.
19நீ உன் தேசத்திலிருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
20உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.
21உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம்.
22வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல நீ அதைப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.
23இரத்தத்தை மாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.
24அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.
25நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது.
26உனக்குரிய பரிசுத்த வஸ்துக்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திற்கு நீ கொண்டுவந்து,
27உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம்.
28நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்.
29நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,
30அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்தபடி நானும் சேவிப்பேன் என்று சொல்லி அவர்களுடைய தேவர்களைக்குறித்துக் கேட்டு விசாரியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
31உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.
32நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது.
2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
3அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.
4அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
5கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.
6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.
9கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
10கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
11நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
12நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
1கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
2கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
3அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.
4பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
5சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
6கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
7சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
8கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
9அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
1என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
2எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.
3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,
5கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
6பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
7கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.
8புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
9சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.
10இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
11மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
12தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
13கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
14தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனை பண்ணினார்?
15இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலேபடியும் தூசிபோலவும், எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
16லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.
17சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்.
18இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?
19கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.
20அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்.
21நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
22அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
23அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
24அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோகும்.
25இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.
26உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
27யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?
28பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.
29சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
30இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
31கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
1பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
2திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,
3சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
4அவ்வேழு இடிகளும், தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.
5சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
6இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
7வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.
8நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
9நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும். ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்.
10நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
11அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com