‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூன் 9 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூன் 9அடுத்த நாள் ›
குடும்பம்
உபாகமம் 13

1உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:

2நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,

3அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.

4நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.

5அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.

6உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,

7உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,

8நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,

9அவனைக் கொலை செய்துபோட வேண்டும்; அவனைக் கொலை செய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.

10அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய்.

11இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.

12உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்ட மனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,

13நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,

14நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,

15அந்தப் பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,

16அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே, கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கக்கடவது.

17சபிக்கப்பட்ட பொருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,

18கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயை செய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.

உபாகமம் 14

1நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.

2நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.

3அருவருப்பானதொன்றையும் புசிக்க வேண்டாம்.

4நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,

5மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.

6மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;

7அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

8பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.

9ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

10சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

11சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.

12நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

13பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும்,

14சகலவித காகங்களும்,

15தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,

16ஆந்தையும், கோட்டானும், நாரையும்,

17கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,

18கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.

19பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.

20சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.

21தானாய் இறந்து போனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக்கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

22நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,

23உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

24உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக்கூடாதிருக்குமானால்,

25அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,

26அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

27லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

28மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.

29லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

சங்கீதம் 99-101

முழு அதிகாரம் ›
சங்கீதம் 99

1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக.

2கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர்.

3மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.

4ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

5நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.

6அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு அருளினார்.

7மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.

8எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.

9நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.

சங்கீதம் 100

1பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

2மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.

3கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

4அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

5கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

சங்கீதம் 101

1இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

2உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.

3தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

4மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.

5பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

7கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.

8அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.

தனிவாசிப்பு

1தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.

2கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி,

3அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?

4அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.

5தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,

6ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.

7சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.

8என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,

9நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

10நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

11இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

12உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

13உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

14யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

15இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

16அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய்.

17சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

18உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி,

19வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்தீம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.

20கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.

21உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.

22அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.

23பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப்பார்ப்போம்.

24இதோ, நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன்.

25நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.

26நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.

27முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகரைக் கொடுக்கிறேன்.

28நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை.

29இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.

வெளிப்படுத்தின விசேஷம் 11

முழு அதிகாரம் ›

1பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.

2ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.

3என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

4பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.

5ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.

6அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.

7அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

8அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.

9ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.

10அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.

11மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

12இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.

13அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

14இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.

15ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

16அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:

17இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.

18ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

19அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com