1கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.
3அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.
4ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.
5ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.
6அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு,
7பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.
8கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.
9எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள்.
10பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.
11அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?
12நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.
13அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
14கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
15அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.
16நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.
17எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.
18இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
19அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
20அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.
21மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
22இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
23அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.
24கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து,
25அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.
26கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.
27அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.
28ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
29இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
30இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.
31கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.
1பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
2அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.
3உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
4அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
5அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
6அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
7உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
8நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?
9தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
10அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
11பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.
12அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
13இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
14அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
15அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
16அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
17அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
18தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,
19அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
20தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
21இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
22பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.
23இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
24மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
25அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.
26நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
27நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
28லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
30மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
31அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
32லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
33தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.
34அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
35திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
36வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
37அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.
1யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
2அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது, யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
3கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
4அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.
5அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது.
6ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன்.
7முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
8ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
9பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
10ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
11இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
12நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
13ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரை ஜெயங்கொள்ளவேண்டும்.
14அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்வதுமில்லை.
15அவர்கள் கலங்கி அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்கு பேச்சு அற்றுப் போயிற்று.
16அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால்,
17நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன்.
18வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
19இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புதுரசத்தைப் போலிருக்கிறது.
20நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
21நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
22நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.
1நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்.
2நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?
3என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.
4அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மனயிடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.
5துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
6அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும்.
7ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும்.
8அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
9நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.
10எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
11சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
12மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,
13நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.
14கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
15இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.
16கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?
17அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com