‹ முகப்புமுழுத் திட்டம்

மார்ச் 4 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மார்ச் 4அடுத்த நாள் ›
குடும்பம்

யாத்திராகமம் 15

முழு அதிகாரம் ›

1அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

2கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

3கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

4பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனார்கள்.

5ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.

6கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.

7உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.

8உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.

9தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

10உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.

11கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

12நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.

13நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழி நடத்தினீர்.

14ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.

15ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.

16பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.

17நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.

18கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்பண்ணுவார்.

19பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரரோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.

20ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

21மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.

22பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.

23அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.

24அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.

25மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும், ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:

26நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

27பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள்.

1சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

2ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.

3அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.

4வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,

5இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.

6பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.

7அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

8சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

9அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

10இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

13ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

14அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

15பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.

16இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

17எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

18அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

19அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

20விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.

21அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.

22இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

23அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.

24அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.

25ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

26அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.

27அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

28அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.

29அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,

30இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

31பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.

32எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.

33அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

34இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.

35பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

36ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.

37நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.

38முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

39இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.

40அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:

41நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.

42இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

43உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

தனிவாசிப்பு

1யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.

2இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.

3என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.

4தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.

5உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.

6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.

7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.

8நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:

9நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.

10இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப்பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.

11அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.

12இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.

13அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்?

14தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.

15கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,

16அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,

17மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.

18இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.

19அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.

20அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்.

21அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.

22அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.

23ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,

24அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.

25அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.

26அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.

27அவன் மனுஷரை நோக்கிப் பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.

28என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.

29இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,

30அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.

31யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.

32சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.

33ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.

II கொரிந்தியர் 3

முழு அதிகாரம் ›

1எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?

2எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.

3ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.

4நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.

5எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.

6புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

7எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.

8ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?

9ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

10இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.

11அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

12நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.

13மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.

14அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.

15மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.

16அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும்.

17கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

18நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com