1இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
2அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
3நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.
4அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
5ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்.
6அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்;
7விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.
8பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திருப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.
9அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.
10ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
11கர்த்தர் மோசேயை நோக்கி:
12இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.
14பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது.
15இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.
16கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.
17இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள்.
18பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
19மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
20மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.
21அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும்.
22ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
23அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.
24மோசே கட்டளையிட்டபடியே, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
25அப்பொழுது மோசே; அதை இன்றைக்குப் புசியுங்கள்; இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
26ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான்.
27ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை.
28அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?
29பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன்தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
30அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
31இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.
32அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும்படிக்கு, அவர்களுக்காக அதைப் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.
33மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.
34கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
35இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.
36ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.
1அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
2ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
3இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
4அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
6அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
7அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
8சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
10இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
11அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
12பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
13புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
14அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாதிபதிகளை அனுப்பினார்கள்.
15அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
16அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
17எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
18அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
19அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
20பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
21நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
22அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
23பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்ளுவேனே என்று சொல்லி;
24சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
25அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
26அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங்கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
28இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.
29அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:
30உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
32அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.
33கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
35அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
37அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,
38கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
39அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.
40அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
41அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,
42உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
43உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்குவரும் என்றார்.
45பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:
46என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.
47அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
48ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.
1பின்னும் எலிகூ மாறுத்தரமாக:
2ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
3வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
4நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
5யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
6நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
7யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,
8அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்?
9எப்பயடியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.
10ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
11மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார்.
12தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.
13பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்?
14அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
15அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
16உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.
17நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
18ஒரு ராஜைவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்லத்தகுமோ?
19இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
20இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
21அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
22அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரணஇருளுமில்லை.
23மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.
24ஆராய்ந்து முடியாத நியாயமாய் அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறே மனுஷரை அவர்கள் ஸ்தானத்திலே நிறுத்துகிறார்.
25அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
26அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும்,
27எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக் கேட்கிற அவர்,
28எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
29மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
30ஒரு ஜனத்துக்கானாலும் ஒரு மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்?
31நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
32நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம்பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
33நீர் அப்படிச் செய்யமாட்டோமென்கிறபடியினால், உம்மோடிருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.
34யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,
35புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான்.
36அக்கிரமக்காரர் சொன்ன மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றமுடிய சோதிக்கப்படவேண்டியதே என் அபேட்சை.
37தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.
1இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை.
2வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
3எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்.
4தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
5நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
6இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
7இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
8நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;
9துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
10கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
11எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
12இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன் செய்கிறது.
13விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
14கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
15தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாகியிருக்கிறது.
16ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
17மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
18ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com