‹ முகப்புமுழுத் திட்டம்

மே 10 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மே 10அடுத்த நாள் ›
குடும்பம்

எண்ணாகமம் 19

முழு அதிகாரம் ›

1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

2கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.

3அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.

4அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன்.

5பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.

6அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன்.

7பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

8அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

9சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக்கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.

10கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.

11செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

12அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான்.

13செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.

14கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.

15மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.

16வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

17ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.

18சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன்.

19சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான்.

20தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.

21தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

22தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

சங்கீதம் 56-57

முழு அதிகாரம் ›
சங்கீதம் 56

1தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.

2என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.

3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?

5நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.

6அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள்.

7அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.

8என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?

9நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.

10தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.

11தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

12தேவனே, நான் உமக்குப் பண்ணினபொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.

13நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?

சங்கீதம் 57

1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

2எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.

3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா). தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.

4என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

6என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)

7என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.

8என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

9ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

10உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.

11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

தனிவாசிப்பு
ஏசாயா 8

1பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.

2அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.

3நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.

4இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.

5பின்னும் கர்த்தர் என்னை நோக்கி:

6இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்,

7இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,

8யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.

9ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

10ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.

11கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:

12இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,

13சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.

14அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.

15அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.

16சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.

17நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.

18இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

19அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம்பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?

20வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

21இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.

22அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.

ஏசாயா 9

1ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.

2இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

3அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.

4மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

5அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.

6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

7தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

1என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.

2ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,

3மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,

4உங்களுக்குள்ளே போதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?

5என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

6நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?

7உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்?

8உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.

9பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.

10எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

11ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.

12சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.

13ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

14என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

15ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,

16உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?

17அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.

18ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.

19தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.

20வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?

21நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?

22விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.

23அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

24ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.

25அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?

26அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com