‹ முகப்புமுழுத் திட்டம்

மே 9 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மே 9அடுத்த நாள் ›
குடும்பம்

எண்ணாகமம் 17-18

முழு அதிகாரம் ›
எண்ணாகமம் 17

1பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:

2நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக.

3லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.

4அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.

5அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்.

6இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.

7அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.

8மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.

9அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.

10அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டு போய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.

11கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.

12அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.

13கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டே வருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லாரும் செத்துதான் தீருமோ என்றார்கள்.

எண்ணாகமம் 18

1பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.

2உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.

3அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,

4உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.

5இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.

6ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்கு தத்தமாகக் கொடுத்தேன்.

7ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படக்கடவன் என்றார்.

8பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.

9மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.

10பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

11இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும்; அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.

12அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.

13தங்கள் தேசத்தில் முதற் பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்.

14இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.

15மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.

16மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.

17மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.

18அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.

19இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.

20பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.

21இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

22இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள்.

23லேவியர் மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்.

24இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.

25பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

26நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

27நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

28இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.

29உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

30ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.

31அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.

32இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.

1தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.

2எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.

3அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.

4என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.

5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.

6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான்பறந்துபோய் இளைப்பாறுவேன்.

7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)

8பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.

9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;

10அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;

11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.

12என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

13எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.

14நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.

15மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது.

16நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.

17அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.

18திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.

19ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)

20அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய்த் தன் கையை நீட்டி தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.

21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

22கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

23தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

தனிவாசிப்பு

1உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணவந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக்கூடாமற்போயிற்று.

2சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறது போல் அசைந்தது.

3அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார் யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,

4நீ அவனை நோக்கி: சீரியர் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாகத் துராலோசனைபண்ணி,

5நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்;

6நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும்கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்.

7கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை;

8சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோகும்.

9எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.

10பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி:

11நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்;

12ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்.

13அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதேன்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?

14ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

15தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.

16அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.

17எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.

18அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.

19அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.

20அக்காலத்தில் ஆண்டவர் கூலிக்கு வாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.

21அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்,

22அவைகள் பூரணமாய்ப் பால்கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான்.

23அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.

24தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்.

25மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே; முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக்கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான்.

1தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:

2என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,

3உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

4நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.

5உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

6ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.

7அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.

8இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.

9தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.

10ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.

11சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.

12சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

13சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.

14அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

15பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

16என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.

17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

18அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

19ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;

20மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

21ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

22அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

23என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பா.யிருப்பான்;

24அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.

25சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.

26உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

27திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com