‹ முகப்புமுழுத் திட்டம்

மே 12 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மே 12அடுத்த நாள் ›
குடும்பம்

எண்ணாகமம் 21

முழு அதிகாரம் ›

1வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

2அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம்பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள்.

3கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.

4அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.

5ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.

6அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.

7அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான்.

8அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

9அப்படியே மோசே ஒரு வெண்கலச்சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

10இஸ்ரவேல் புத்திரர் பிராயணப்பட்டுப்போய், ஓபோத்தில் பாளயமிறங்கினார்கள்.

11ஓபோத்திலிருந்து பிரயாணம்பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள்.

12அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், சாரேத் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.

13அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.

14அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,

15ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

16அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.

17அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.

18நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.

19அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்துக்கும்,

20பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.

21அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

22உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள்.

23சீகோன் தன் எல்லை வழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.

24இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.

25இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.

26எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.

27அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.

28எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது.

29ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.

30அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதோபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.

31இஸ்ரவேலர் இப்படியே எமோரியரின் தேசத்திலே குடியிருந்தார்கள்.

32பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.

33பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன் சமஸ்த ஜனங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான்.

34கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.

35அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.

சங்கீதம் 60-61

முழு அதிகாரம் ›
சங்கீதம் 60

1தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

2பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.

3உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

4சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா)

5உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.

6தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

7கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

8மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

9அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழி காட்டுகிறவர் யார்?

10எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ?

11இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.

12தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

சங்கீதம் 61

1தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.

2என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

3நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.

4நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)

5தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.

6ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.

8இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.

தனிவாசிப்பு

5என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.

6அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.

7அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.

8அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?

9கல்னோபட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?

10எருசலேமையும் சமாரியாவையும்பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,

11நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.

12ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

13அவன் என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் ஜனங்களின் எல்லகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தினேன்.

14ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத்திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.

15கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.

16ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப் போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.

17இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,

18அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.

19காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.

20அக்காலத்திலே இஸ்ரவேலின் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.

21மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.

22இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும்.

23சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.

24ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.

25ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோகும் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

26ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.

27அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோகும்.

28அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.

29கணவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.

30காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்ட சத்தமிட்டுக் கூப்பிடு.

31மத்மேனா வலசைவாங்கிப்போகும், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.

32இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுவான்.

33இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

34அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.

1உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களிலே போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?

2நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.

3நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.

4விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

5நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?

6அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

7ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

8தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.

9நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது.

10கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

11சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.

12நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?

13மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.

14நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.

15ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.

16இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைப்பாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.

17ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com