1பின்பு இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள்.
2இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான்.
3ஜனங்கள் ஏராளமாயிருந்தபடியினால், மோவாப் மிகவும் பயந்து, இஸ்ரவேல் புத்திரரினிமித்தம் கலக்கமடைந்து,
4மீதியானரின் மூப்பரை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான். அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான்.
5அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.
6அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால் நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்.
7அப்படியே மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.
8அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.
9தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்.
10பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:
11பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம்பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.
12அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.
13பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்துக்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான்.
14அப்படியே மோவாபியருடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில் போய்: பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.
15பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.
16அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;
17உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.
18பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும் பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது.
19ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு, நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.
20இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து; அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.
21பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடே கூடப் போனான்.
22அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
23கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.
24கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
25கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.
26அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.
27கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.
28உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
29அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
30கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.
31அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.
32கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
33கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுதரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.
34அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப்போய்விடுகிறேன் என்றான்.
35கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடேகூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையை மாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடே கூடப்போனான்.
36பிலேயாம் வருகிறதைப் பாலாக்கேட்டமாத்திரத்தில், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணமட்டும் அவனுக்கு எதிர்கொண்டு போனான்.
37பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான்.
38அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.
39பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.
40அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.
41மறுநாள் காலமே பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசிப் பாளயத்தைப் பார்த்தான்.
1தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.
2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.
3நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.
4அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா)
5என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
6அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
7என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.
8ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா)
9கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.
10கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.
11தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.
12கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.
1தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
2இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
3ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
6என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
7நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
8என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
9என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
10அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
11ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மை பாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
1ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
2ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
3கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
4நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
5நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.
6அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
7பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.
8பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.
9என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
10அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்.
11அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,
12ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
13எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாயிரான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தான்.
14அவர்கள் இருவரும் ஏகமாய்க்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கீழ்த்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் கைபோடுவார்கள்; அம்மோன் புத்திரர் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.
15எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.
16இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய ஜனத்தில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.
1அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.
2இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
3நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
4அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.
5கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
6சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
1ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
2உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின.
3உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
4இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
5பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.
6நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.
7இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
8நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
9சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
10என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
11இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
12விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.
13உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.
14உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
15அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
16நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
17எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
18மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
19சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
20தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com