‹ முகப்புமுழுத் திட்டம்

மே 23 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மே 23அடுத்த நாள் ›
குடும்பம்

எண்ணாகமம் 32

முழு அதிகாரம் ›

1ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

2ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:

3கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.

4உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.

5உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

6அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?

7கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?

8அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.

9அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு மட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்து வந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.

10அதினால் கர்த்தர் அந்நாழிலே கோபம் மூண்டவராகி:

11உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,

12எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.

13அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின் மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.

14இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர் மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்.

15நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான்.

16அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.

17நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

18இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை.

19யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடேகூட யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம் என்றார்கள்.

20அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,

21கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்து போவீர்களானால்,

22அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு, நீங்கள் திரும்பி வந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்.

23நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

24உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.

25அப்பொழுது காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் மோசேயை நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.

26எங்கள் பிள்ளைகளும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.

27உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.

28அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:

29காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.

30உங்களோடேகூட யுத்தசன்னத்தராய்க் கடந்துபோகாதிருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையக்கடவர்கள் என்றான்.

31காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.

32யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் கானான் தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.

33அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.

34பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,

35ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,

36பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.

37ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,

38பேர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.

39மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக்கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.

40அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.

41மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.

42நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.

1நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

2என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

3நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்து போயிற்று. (சேலா)

4நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.

5பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.

6இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

7ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாதிருப்பாரோ?

8அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?

9தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)

10அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.

11கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;

12உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.

13தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?

14அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.

15யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)

16ஜலங்கள் உம்மைக் கண்டது; தேவனே, ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.

17மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.

18உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.

19உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.

20மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.

தனிவாசிப்பு

1இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிகளைச் சிதறடிப்பார்.

2அப்பொழுது, ஜனத்துக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லாருக்கும் சரியாக நடக்கும்.

3தேசம் முழுதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.

4தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.

5தேசம் தன் குடிகளின் மூலமாய் தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.

6இதினிமித்தம் சாபம் தேசத்தைப் பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.

7திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சுவிடுவார்கள்.

8மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும்.

9பாடலோடே திராட்சரசம் குடியார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும்.

10வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே பிரவேசிக்கக்கூடாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும்.

11திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; எல்லாச் சந்தோஷமும் மங்கி, தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போகும்.

12நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப்பாழாய்க் கிடக்கும்.

13ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சப்பழங்களை அறுத்துத் தீரும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்துக்குள்ளும் இந்த ஜனங்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும்.

14அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; கர்த்தருடைய மகத்துவத்தினிமித்தம் சமுத்திரத்தினின்று ஆர்ப்பரிப்பார்கள்.

15ஆகையால் கர்த்தரை, வெளுக்குந்திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.

16நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன்.

17தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

18அப்பொழுது திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.

19தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.

20வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோகும், இனி எழுந்திராது.

21அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.

22அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.

23அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.

1என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

2நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

3அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

4அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

5அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

6அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

7சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.

8மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

9ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.

10தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.

11தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.

12பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

13பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

14பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

15உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.

16ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

17உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

18பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

19அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்.

20நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம்பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.

21சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

22இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

23குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.

24ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.

25நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

26உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

27நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

28இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.

29அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com