‹ முகப்புமுழுத் திட்டம்

மே 24 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மே 24அடுத்த நாள் ›
குடும்பம்

எண்ணாகமம் 33

முழு அதிகாரம் ›

1மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருடைய பிரயாணங்களின் விபரம்:

2மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:

3முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள்.

4அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன் பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின் பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.

5பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள்.

6சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.

7ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.

8ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்று நாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.

9மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள்.

10ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே பாளயமிறங்கினார்கள்.

11சிவந்த சமுத்திரத்தை விட்டுப் பறப்பட்டுப்போய், சீன் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

12சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே பாளயமிறங்கினார்கள்.

13தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே பாளயமிறங்கினார்கள்.

14ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள். அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.

15ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

16சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.

17கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.

18ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே பாளயமிறங்கினார்கள்.

19ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள்.

20ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே பாளயமிறங்கினார்கள்.

21லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே பாளயமிறங்கினார்கள்.

22ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.

23கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே பாளமிறங்கினார்கள்.

24சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள்.

25ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.

26மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.

27தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.

28தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே பாளயமிறங்கினார்கள்.

29மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.

30அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள்.

31மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.

32பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.

33கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.

34யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே பாளயமிறங்கினார்கள்.

35எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.

36எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

37காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள்.

38அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

39ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாயிருந்தான்.

40அந்நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான்.

41ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.

42சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.

43பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.

44ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.

45அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள்.

46தீபோன்காத்திலிருந்து புறப்புட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே பாளயமிறங்கினார்கள்.

47அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.

48அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.

49யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.

50எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

51நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,

52அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,

53தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.

54சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.

55நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.

56அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.

சங்கீதம் 78:1-37

முழு அதிகாரம் ›

1என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.

2என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.

3அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

4பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதியங்களையும் விவரிப்போம்.

5அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

6இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;

7தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;

8இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.

9ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.

10அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,

11அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.

12அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.

13கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படிச்செய்தார்.

14பகலிலே மேகத்தினாலும், இராமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.

15வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.

16கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.

17என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள்.

18தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக்கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

19அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?

20இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள்.

21ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,

22யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம் மூண்டது.

23அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,

24மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

25தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.

26ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,

27மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி,

28அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார்.

29அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.

30அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே.

31தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.

32இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.

33ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.

34அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;

35தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.

36ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.

37அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.

தனிவாசிப்பு

1கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.

2நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் ராஜதானியை ஊராயிராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர்.

3ஆகையால் பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும்.

4கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.

5வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும்.

6சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.

7சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.

8அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

9அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

10கர்த்தருடைய கரம் இந்த மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போகும்.

11நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும், அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார்.

12அவர் உன் மதில்களுடைய உயர்ந்த அரணைக் கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்.

1நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

2பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

3அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

4பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

5அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

6அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.

7பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

8பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

9தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

10இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.

11நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.

12பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

13என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.

14நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.

15தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

16அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

17ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

18என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

19இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

20நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.

21பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,

22அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.

23நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.

24அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com