1யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாக வந்து, அவர்களை நோக்கி:
2சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.
3இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே.
4இஸ்ரவேல் புத்திரருக்கு யூபிலி வருஷம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள்.
5அப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: யோசேப்பு புத்திரரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே.
6கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்.
7இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.
8இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.
9சுதந்தரமானது ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.
10கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்.
11செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால்,
12அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது.
13எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
1இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
2எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.
3தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
4சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
5கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்குப் போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
6எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம் பண்ணுகிறார்கள்.
7சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
11அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
12இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;
15உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.
16அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.
17உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருப்பதாக.
18அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.
19சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
1எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
2இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
3எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும்.
4செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
5அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,
6நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.
7ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்.
8போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
9அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.
10கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
11பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
12இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
13ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
14ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
15நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே.
16ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்.
17நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.
18நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.
19அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
20கால் நீட்டப் படுக்கையின் நீளம்போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.
21கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
22இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
23செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
24உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?
25அவன் அதை மேலாக நிரவினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?
26அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.
27உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டியின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.
28அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.
29இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.
1நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும்,
2தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது:
3பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக.
4பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன்.
5இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
6நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
7மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
8உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
9கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
10ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
11அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.
12உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.
13தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com