‹ முகப்புமுழுத் திட்டம்

மே 28 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மே 28அடுத்த நாள் ›
குடும்பம்

1சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொரு நாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,

2சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:

3எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு,

4நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.

5யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் தொடங்கி,

6ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.

7நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்துக்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரைக்கும் போங்கள்.

8இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக் கொடுத்த அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.

9அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக்கூடாது.

10உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள்.

11நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.

12உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது எப்படி?

13நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும், விவேகமும், அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.

14நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள்.

15ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தி வைத்தேன்.

16அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.

17நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

18நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.

19நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.

20அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக்கொடுக்கும் எமோரியரின் மலைநாடுமட்டும் வந்து சேர்ந்தீர்கள்.

21இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்.

22அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.

23அது எனக்கு நன்றாய்க் கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாகப் பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.

24அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அதை வேவுபார்த்து,

25அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.

26அப்படியிருந்தும், நீங்கள் போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து,

27உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

28நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயத்தைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள்.

29அப்பொழுது நான் உங்களை நோக்கி: நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள்.

30உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், வனாந்தரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்.

31ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.

32உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் பாளயமிறங்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும்,

33இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள்.

34ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:

35உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,

36எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்து வந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.

37அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை;

38உனக்கு முன்பாக நிற்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகப் பங்கிடுவான்.

39கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

40நீங்களோ திரும்பிக்கொண்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணப்பட்டுப் போங்கள் என்றார்.

41அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.

42அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

43அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள்.

44அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மா மட்டும் முறிய அடித்தார்கள்.

45நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.

46இப்படி காதேசிலே தங்கி, அங்கே வெகுநாளாயிருந்தீர்கள்.

சங்கீதம் 81-82

முழு அதிகாரம் ›
சங்கீதம் 81

1நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.

2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.

3மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.

4இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது.

5நாம் அறியாத பாஷையைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படுகையில், இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.

6அவன் தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவன் கைகள் கூடைக்கு நீங்கலாக்கப்பட்டது.

7நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)

8என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.

9உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.

10உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.

11என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.

12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்.

13ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!

14நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.

15அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.

16உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

சங்கீதம் 82

1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்கள். (சேலா)

3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

6நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

7ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.

8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

தனிவாசிப்பு

1தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,

2அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.

3உன்னைச் சூழப் பாளயமிறங்கி, உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களை எடுப்பிப்பேன்.

4அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம்பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசென்று உரைக்கும்.

5உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர்களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.

6இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்.

7அரியேலின்மேல் யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும், அதின்மேலும் அதின் அரண்மேலும் யுத்தம்பண்ணி, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும், இராக்காலத்தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்.

8அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.

9தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.

10கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார்.

11ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்.

12அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்.

13இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

14ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

15தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ!

16ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?

17இன்னும் கொஞ்சக்காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.

18அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.

19சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.

20கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.

21ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.

22ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக்குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.

23அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.

24வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.

1மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது:

2பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

3சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

4என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

5பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.

6அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும்.

7ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.

8ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்.

9நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

10ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பேதள்ளுகிறான்.

11பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.

12தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.

13எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.

14சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய்ப் பேசிக்கொள்ளுவோம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com