1கர்த்தர் மோசேயை நோக்கி:
2சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப்பூரிகைகளைச் செய்துகொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
3அவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக்கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
4ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.
5நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.
6அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்.
7சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதவேண்டியதேயன்றி பெருந்தொனியாய் முழக்கவேண்டாம்.
8ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் பூரிகைகளை ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.
9உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமூகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.
10உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்கதகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார்.
11இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.
12அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.
13இப்படியே கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.
14யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
15இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
16செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.
17அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
18அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.
19சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.
20காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.
21கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள்.
22அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.
23மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.
24பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.
25அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
26ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.
27நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான்.
28இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள்.
29அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம் போகிறோம்; நீயும் எங்களோடே கூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.
30அதற்கு அவன்: நான் வரக்கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான்.
31அப்பொழுது மோசே: நீ எங்களை விட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.
32நீ எங்களோடேகூட வந்தால், கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம் என்றான்.
33அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன் சென்றது.
34அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம் போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
35பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.
36அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான.
1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
2ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,
3அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா)
4ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.
5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.
6ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.
7சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)
8பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்துபாருங்கள்.
9அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
10நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
11சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)
1சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
2உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.
3ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா)
5தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
8தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
9ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.
1ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
2நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
3அவர் இடதுகை என் தலையின்கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.
4எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.
5தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
6நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது.
7திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.
8நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
9அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
10நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.
11பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.
12என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
13தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.
14என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
1மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,
2பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
3ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது.
4பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;
5இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
6இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.
7அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
8அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
9அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
11அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
12ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com