1பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.
2அப்பொழுது ஜனங்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; உடனே அக்கினி அவிந்துபோயிற்று.
3கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான்.
4பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?
5நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.
6இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.
7அந்த மன்னா கொத்துமல்லி விதையம்மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது.
8ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து, எந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.
9இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
10அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த ஜனங்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது பொல்லாப்பாயிருந்தது.
11அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?
12இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?
13இந்த ஜனங்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.
14இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.
15உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
16அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக்கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படிசெய்.
17அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.
18நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார்.
19நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபதுநாள் மாத்திரமல்ல,
20ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
21அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
22ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்.
23அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
24அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
25கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
26அப்பொழுது இரண்டு பேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
27ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.
28உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.
29அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
30பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள்.
31அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், அந்தப்பக்கம் ஒரு நாள் பிராயணமட்டும், தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
32அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்.
33தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.
34இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.
35பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸ்ரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.
1கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
3அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
5அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
6அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.
7கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
8நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா)
9தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
10தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
11உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.
13பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.
14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
1ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக்கண்ட தரிசனம்.
2வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.
3மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.
4ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
5இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
6உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.
7உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாக பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது.
8சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கை போடப்பட்ட ஒரு பட்டணம்போலவும் மீந்திருக்கிறாள்.
9சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
10சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
11உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை.
12நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?
13இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
14உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
15நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
16உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;
17நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
18வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
19நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
20மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
21உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.
22உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது.
23உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.
24ஆகையால் சேனைகளின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது; ஓகோ, நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன்.
25நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
26உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய்.
27சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.
28துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டுபோவார்கள்; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.
29நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.
30இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்.
31பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோகும் என்று சொல்லுகிறார்.
1அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது.
2எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.
3இரண்டாந்திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது.
4அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
5அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை.
6இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.
7இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒரு தரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
8அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.
9அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.
10இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.
11கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும்,
12வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
13அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,
14நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
15ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
16ஏனென்றால், எங்கே மரணசாசனமுண்டோ, அங்கே அந்த சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
17எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.
18அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை.
19எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:
20தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
21இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
22நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
23ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.
24அந்தப்படி. மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.
25பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.
26அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
27அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
28கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com