1பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.
2அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தது போல, அவனுக்கும் செய்வாய் என்றார்.
3அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.
4அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்யமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம்.
5அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் வாசல்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் அன்றி, மதிலில்லாத பட்டணங்களும் அநேகம்.
6அவைகளையும் சங்காரம்பண்ணினோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம்.
7ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.
8இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்து பிடித்தோம்.
9சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
10சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள் மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
11மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
12அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.
13கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சததேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன்.
14மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள் வரைக்கும் வழங்கிவருகிறது.
15மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.
16மேலும் கீலேயாத் தொடங்கி, அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும்,
17கின்னரேத் தொடங்கி அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாய்க் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமனான வெளியின் கடல்மட்டும், யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமனான வெளியையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.
18அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார்; யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்துபோங்கள்.
19உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும் மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.
20ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணினதுபோல, உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சுதந்தரத்துக்குத் திரும்புவீர்களாக என்றேன்.
21அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.
22அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் என்று சொன்னேன்.
23அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:
24கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்?
25நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.
26கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம்.
27நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்து போவதில்லை.
28நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.
29பின்பு பெத்பெயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.
1கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
2உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)
3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
4எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.
5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
6உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
7கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
8கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.
9நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
10கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
11சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.
12கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
13நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.
1சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
2அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.
3எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.
4கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.
5பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
6இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்.
7உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.
8அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; நீசனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.
9அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.
1சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
2இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
3இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
4யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
5உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
6நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
7இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
8இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
9உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
10கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
11அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
12அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
13அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி, தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
14அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது;
15அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
16தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
17நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
18மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
19நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;
20என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com