1இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.
2நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி. நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
3பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.
4ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்ட நீங்களெல்லாரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள்.
5நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.
6ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.
7நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?
8இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?
9ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,
10உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
11நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
12அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை.
13நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
14நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.
15கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.
16ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
17பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,
18பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
19உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
20இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார்.
21கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார்.
22அதினால் இந்த தேசத்தில் நான் மரணமடையவேண்டும்; நான் யோர்தானைக் கடந்து போவதில்லை; நீங்களோ கடந்துபோய், அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்கள்.
23நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
24உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.
25நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால்,
26நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.
27கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள்.
28அங்கே காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள்.
29அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.
30நீ வியாகுலப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால்,
31உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.
32தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல், உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ;
33அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டது போல, யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ,
34அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
35கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.
36உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.
37அவர் உன் பிதாக்களில் அன்பு கூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு,
38உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
39ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,
40நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்.
41முற்பகையின்றிக் கைப்பிசகாய் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய்ப் பிழைத்திருக்கும்படியாக,
42ரூபனியரைச் சேர்ந்த சமபூமியாகிய வனாந்தரத்திலுள்ள பேசேரும், காத்தியரைச் சேர்ந்த கீலேயாத்திலுள்ள ராமோத்தும், மனாசேயரைச் சேர்ந்த பாசானிலுள்ள கோலானுமாகிய,
43மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையிலே ஏற்படுத்தினான்.
44இதுவே மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த பிரமாணம்.
45இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, யோர்தானுக்கு இப்புறத்தில் எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுடைய தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே, அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
46மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து,
47யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்குமுள்ள தேசமும்,
48யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச்சேர்ந்த கடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய,
49எமோரியருடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
1கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.
2என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
5ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
6கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
7நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
8ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.
9ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
10தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
11கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
12என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
13நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
14தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.
15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.
17கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.
1அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
2கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா)
4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
5சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
6கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா)
7எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.
1இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.
2அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
3அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
4பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
5மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.
6ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.
7லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.
8தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
9சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.
10நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போகும்; அறுப்புக்காலம் வராது.
11சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.
12செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.
13என் ஜனத்தினுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
14அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.
15உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.
16வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.
17நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
18என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
19ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோகும்.
20மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
1எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
2உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
3நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
4ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
5ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
6நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.
7ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
8சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
9உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
10நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
11ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
12பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
13உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
14ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
15அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
16நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
17ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
18தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
19உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
20ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
21அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
22இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
23அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
24தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
25உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
26ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
28விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
29ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com