‹ முகப்புமுழுத் திட்டம்

மே 7 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மே 7அடுத்த நாள் ›
குடும்பம்

எண்ணாகமம் 15

முழு அதிகாரம் ›

1கர்த்தர் மோசேயை நோக்கி:

2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்த பின்பு,

3விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்கதகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது,

4தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.

5பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.

6ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லியமாவின் போஜனபலியையும்,

7பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

8நீ சர்வாங்கதகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனைபலிக்காகிலும், சமாதானபலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,

9அதனோடே பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,

10பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.

11இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும்.

12நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத்தக்கதாய், ஒவ்வொன்றிற்காகவும் இந்தப் பிரகாரம் செய்யவேண்டும்.

13சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

14உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.

15சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.

16உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

17பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

18நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,

19தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.

20உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப்படைக்கவேண்டும்.

21இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப்படைக்கக்கடவீர்கள்.

22கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

23கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,

24அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

25அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

26அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.

27ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒருவயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.

28அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.

29இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.

30அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

31அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.

32இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.

33விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

34அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.

35கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.

36அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

37பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

38நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.

39நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.

40நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.

41நான் உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

1தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

2என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

3என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.

4தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.

5இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

6இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

8நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.

9என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.

10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

11உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

12உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.

13அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.

14தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.

15ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

16பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.

17தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

18சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.

19அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

தனிவாசிப்பு

1இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.

2அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

3எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.

4நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?

5இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோகும்.

6அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.

7சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

8தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!

9சேனைகளின் கர்த்தர் என் செவி கேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.

10பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்.

11சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!

12அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.

13என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.

14அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள் கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்.

15சிறியவன் தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோகும்.

16சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார்.

17அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள்.

18மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து,

19நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!

20தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!

21தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!

22சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து,

23பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!

24இதினிமித்தம் அக்கினிஜூவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே.

25ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

26அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள்.

27அவர்களில் விடாய்த்தவனும் இடறுகிறவனும் இல்லை; தூங்குகிறவனும் உறங்குகிறவனும் இல்லை; அவர்களில் ஒருவனுடைய இடுப்பின் கச்சை அவிழ்வதும், பாதரட்சைகளின் வார் அறுந்துபோவதும் இல்லை.

28அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.

29அவர்கள் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்புபோலிருக்கிறது; பாலசிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து, தப்புவிக்கிறவன் இல்லாமல், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

30அந்நாளில், சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோகும்.

1ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

2அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

3ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.

4பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.

5அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

6கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

7நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

8எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

9அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?

10அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

11எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

12ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,

13முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.

14யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

15ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,

16ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

17ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.

18அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,

19எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.

20ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.

21மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.

22நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம்பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,

23பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,

24புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்.

25பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?

26அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.

27இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது.

28ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.

29நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com