1லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,
2இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி,
3மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.
4மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
5பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.
6ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,
7நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான்.
8பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;
9கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,
10அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?
11இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான்.
12பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;
13இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்கிறாயோ?
14மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.
15அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.
16பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
17உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.
18அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
19அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
20கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி:
21இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார்.
22அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.
23அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
24கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.
25உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.
26அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.
27அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள்.
28அப்பொழுது மோசே: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால்,
29சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
30கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்.
31அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
32பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.
33அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.
34அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.
35அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது.
36பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:
37அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின.
38தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.
39அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,
40ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
41மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்று போட்டீர்கள் என்றார்கள்.
42சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது.
43மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்;
44அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
45இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
46மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை தொடங்கிற்று என்றான்.
47மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,
48செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
49கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.
50வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.
1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
2நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
3நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
4கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;
5தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா)
6நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
7இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
8நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
9நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
1தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
3அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
4அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
5உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
1தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும்.
2தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
3அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா)
4இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
5அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
6உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.
7அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
1உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.
2சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன்தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;
3ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
4கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.
5அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
6அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து,
7அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
8பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
9அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
10இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
11அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
12கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே.
13ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளில் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.
1சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
2அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
3கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
4விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
5நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
6அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
7தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
8இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
9பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
10நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.
11ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.
12அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
13ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.
14நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம்.
15ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
16அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
17உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
18எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.
19நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.
20நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
21இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
22சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
23சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.
24உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
25கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com