1இஸ்ரவேலர் எல்லாரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.
2சவுல் இன்னும் ராஜாவாயிருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டு வருவீர்; என் ஜனமாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.
3அப்படியே இஸ்ரவேலின் மூப்பரெல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.
4பின்பு தாவீது இஸ்ரவேலனைத்தோடுங்கூட ஏபூசாகிய எருசலேமுக்குப் போனான்; எபூசியர் அத்தேசத்தின் குடிகளாயிருந்தார்கள்.
5அப்பொழுது ஏபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
6எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.
7தாவீது அந்தக் கோட்டையில் வாசம்பண்ணினபடியினால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.
8பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.
9தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
10கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்,
11தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்றுபோட்டான்.
12இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.
13பெலிஸ்தர் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், ஜனம் பெலிஸ்தரைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடே அங்கே இருந்தான்.
14அப்பொழுது அவர்கள் இந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தரை மடங்கடித்தார்கள்; அதினாலே கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.
15முப்பது தலைவரில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் கெபியிலிருக்கிற தாவீதினிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் பாளயம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது,
16தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமில் இருந்தது.
17தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
18அப்பொழுது அந்த மூன்றுபேர் பெலிஸ்தரின் பாளயத்திற்குள் துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
19நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
20யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை மடங்கடித்ததினால் இந்த மூன்றுபேரில் பேர்பெற்றவனானான்.
21இந்த மூன்றுபேரில் அவன் மற்ற இரண்டுபேரிலும் மேன்மையுள்ளவனானதினால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமானமானவனல்ல.
22பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும், கப்சேயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழை பெய்த நாளில் அவன் ஒரு கெபிக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
23ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
24இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.
25முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
26இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் ஏல்க்கானான்,
27ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
28தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
29ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
30நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,
31பென்யமீன் புத்திரரின் கிபேயா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
32காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,
33பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய ஏலியாபா,
34கீசோனியனாகிய ஆசேமின் குமாரர், ஆராரியனாகிய சாகியின் குமாரன் யோனத்தான்.
35ஆராரியனாகிய சாக்காரின் குமாரன் அகியாம், ஊரின் குமாரன் ஏலிபால்,
36மெகராத்தியனாகிய எப்பேர், பெலோனியனாகிய அகியா,
37கர்மேலியனாகிய ஏஸ்ரோ, ஏஸ்பாயின் குமாரன் நாராயி,
38நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார்,
39அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
40இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரெப்,
41ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,
42ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பது பேர் இருந்தார்கள்.
43மாகாவின் குமாரன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,
44அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் குமாரர் சமாவும், யேகியேலும்,
45சிம்ரியின் குமாரன் ஏதியாயேல், தித்சியனாகிய அவன் சகோதரன் யோகா,
46மாகாவியரின் புத்திரன் ஏலியேல், ஏல்நாமின் குமாரர் ஏரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும்,
47மெசோபாயா ஊராராகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.
1தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில், சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து,
2யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரரும், கவண்கல் எறிகிறதற்கும் வில்லினால் அம்பு எய்கிறதற்கும் வலது இடது கைவாட்டமான பராக்கிரமசாலிகளான மற்ற மனுஷருமாவன: சவுலின் சகோதரராகிய பென்யமீன் கோத்திரத்தில்,
3கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,
4முப்பதுபேரில் பராக்கிரமனும் முப்பதுபேருக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத்,
5எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா,
6எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோரேகியரும்,
7யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் குமாரருமே.
8காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்.
9யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
10நாலாவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
11ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
12எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,
13பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி,
14காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்.
15யோர்தான் கரைபுரண்டு போயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
16பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதா புத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள்.
17தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவு கொடுத்து: நீங்கள் எனக்கு உதவி செய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
18அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே, உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.
19சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவன் பட்சயமாய்ச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சயமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.
20அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில், மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள்.
21அந்தத் தண்டுக்கு விரோதமாய் இவர்கள் தாவீதுக்கு உதவி செய்தார்கள்; இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகளும் இராணுவத்தில் சேர்வைக்காரருமாயிருந்தார்கள்.
22அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.
23கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்தசன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:
24யூதா புத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்த சன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
25சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.
26லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர்.
27ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடிருந்த மூவாயிரத்து எழுநூறுபேரும்,
28பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
29பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள்.
30எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர்பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.
31மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர்.
32இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.
33செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்து நிற்கிறதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
34நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
35தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
36ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
37யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.
38தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணிஅணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள்.
39அவர்கள் அங்கே தாவீதோடேகூட மூன்று நாள் இருந்து, போஜனபானம்பண்ணினார்கள்; அவர்கள் சகோதரர் அவர்களுக்காகச் சகலத்தையும் ஆயத்தம்பண்ணியிருந்தார்கள்.
40இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும், மாடுகள் மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.
1சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
2அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
3கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
4விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
5நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
6அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
7தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
8இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
9பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
10நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.
11ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.
12அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
13ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.
14நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம்.
15ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
16அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
17உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
18எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.
19நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.
20நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
21இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
22சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
23சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.
24உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
25கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
1கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
2அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
3கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
4கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.
5அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
6கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
7பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
8கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
9ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார்.
10அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.
11எரொபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.
12அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
13பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.
14ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.
15ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.
16இப்போதும், நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
17இதினிமித்தம் உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
1அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
3அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
4அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.
6அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
7அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
8அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
10தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
13அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
17கண்டு, அந்தப் பிள்ளையைக்குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
19மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
21பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
22மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
23முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
24கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
25அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
26கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,
28அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.
32உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
33அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
36ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
38அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.
39கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
40பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
41அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
42அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
43பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
46மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
47அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
48தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டிதென்று அறியீர்களா என்றார்.
50தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
51பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
52இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com