1தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,
2இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆள் அனுப்பி,
3நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்.
4இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.
5அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,
6கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத் யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப் போனார்கள்.
7அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.
8தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழு பலத்தோடும் தேவனுக்கு முன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.
9அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
10அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
11அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ் ஊசா என்னும் பேரிட்டு,
12அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
13பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டிலே சேர்த்தான்.
14தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
1தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.
2கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
3எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
4எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
5இப்கார், எலிசூவா, எல்பெலேத்,
6நோகா, நெப்பேக், யப்பியா,
7எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
8தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.
9பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
10பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
11அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார் என்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.
12அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.
13பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
14அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
15முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
16தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.
17அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.
1தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:
2என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
3உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
4நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.
5உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
6ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
7அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
8இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
9தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.
10ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.
11சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.
12சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
13சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
14அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
15பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
16என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.
17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
18அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.
19ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
20மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
21ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
22அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
23என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பா.யிருப்பான்;
24அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.
25சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
26உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
27திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
1பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.
2அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
3அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
4தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி:
5நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,
6நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.
7அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.
8இதினிமித்தம் தேசம் அதிரவும் அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?
9அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,
10உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
11இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
12அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.
13அந்நாளிலே சௌந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள்.
14தாணே! உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.
1திபேரியுராயன் ராஜ்யபாரம்பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2அன்னாவும் காய்பாவும் பிரதானஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
3அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
5மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,
6அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
7அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
8மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
9இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.
10அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
11அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
12ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.
13அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
14போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
15யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,
16யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுப்பார்.
17தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
18வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
19காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
20தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.
21ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
22பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
23அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
24ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
25யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
26நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
27யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
29யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
30லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன்.
31எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
32தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
33நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
34யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
35நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
36சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
37லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.
38ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com