1இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.
2அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.
3அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
4மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
5கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
6அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
7அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
8யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,
9தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.
10யாபேசின் குமாரனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
11சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
12உன் குமாரர் நாலாம் தலைமுறை மட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று.
13யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.
14காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
15சல்லூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
16அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.
17யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருஷம், ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
18இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.
19அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.
20இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.
21மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
22மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
23யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
24கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.
25ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
26பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
27யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
28கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.
29இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
30ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
31பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
32இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.
33அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.
34அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
35மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.
36யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
37அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.
38யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின். தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:
2பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,
4ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
5நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேன்.
6குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
7ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,
8அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
9ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
10அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
11அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
12கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
13இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,
14விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
15சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
16அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
1உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.
2எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.
3ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான்.
4அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.
5சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்?
6அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப்போகும்.
7அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.
8இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
9அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக் கழுதையைப்போல் அசீரியரண்டைக்குப் போனார்கள்; எப்பிராயீமர் நேசரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டார்கள்.
10அவர்கள் புறஜாதியாரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்துக்குள்ளே அகப்படுவார்கள்.
11எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.
12என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
13எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள்.
14இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.
1பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
2இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
3எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
4சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.
1மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,
2கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
3அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
5கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
8நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
1கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
2பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
3நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
4கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
5தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com