‹ முகப்புமுழுத் திட்டம்

நவம்பர் 1 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்நவம்பர் 1அடுத்த நாள் ›
குடும்பம்

II இராஜாக்கள் 14

முழு அதிகாரம் ›

1இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசுடைய இரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜாவானான்.

2அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் யொவதானாள்.

3அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.

4மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்.

5ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

6ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்கள் கொலைசெய்யப்படாமலும் பிதாக்களினிமித்தம் பிள்ளைகள் கொலைசெய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.

7அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள் வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத் தரித்தான்.

8அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான்.

9அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுரு மரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ் செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப் போட்டது.

10நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.

11ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; ஆகையால், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது,

12யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

13அகசியாவின் குமாரனாகிய யோவாசின் குமாரன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,

14கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட பொன் வெள்ளி யாவையும், சகல பணிமுட்டுகளையும், கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.

15யோவாஸ் செய்த மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு யுத்தம்பண்ணின விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

16யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

17இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.

18அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

19எருசலேமிலே அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு,

20குதிரைகள்மேல் அவனை எடுத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

21யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்து வந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

22ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.

23யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம்வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு,

24கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை.

25காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.

26இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார்.

27இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை இரட்சித்தார்.

28யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

29யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

II தீமோத்தேயு 4

முழு அதிகாரம் ›

1நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

2சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.

3ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு.

4சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

5நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

6ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.

7நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

8இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

9நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

10ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

11லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

12தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

13துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

14கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

15நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.

16நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

17கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

18கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

19பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

20எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.

21மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

22கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

தனிவாசிப்பு

1நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.

2அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது.

3ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.

4அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.

5நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத்துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான்.

6அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜூவாலிக்கிற அக்கினியாய் எரியும்.

7அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.

8எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம்.

9அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான்.

10இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.

11எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள்.

12அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களை தண்டிப்பேன்.

13அவர்கள் என்னைவிட்டு அலைந்து திரிகிறபடியினால் அவர்களுக்கு ஐயோ! அவர்களுக்குக் கேடுவரும்; எனக்கு விரோதமாக இரண்டகம்பண்ணினார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள்.

14அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.

15நான் அவர்களை தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்பண்ணினேன்; ஆகிலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்.

16திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.

சங்கீதம் 120-122

முழு அதிகாரம் ›
சங்கீதம் 120

1என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

2கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.

3கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?

4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

5ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

7நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.

சங்கீதம் 121

1எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

2வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

3உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.

5கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

6பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

7கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.

8கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.

சங்கீதம் 122

1கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

2எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.

3எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.

4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.

5அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

6எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

7உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

8என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.

9எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com