1யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
2கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் செய்யவில்லை.
3அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனைச் சேவிக்கிறவனாகி, அவனுக்குப் பகுதி கட்டினான்.
4ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்.
5அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்றுவருஷம் முற்றிக்கை போட்டிருந்தான்.
6ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
7எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,
8கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள்.
9செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,
10உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி,
11கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,
12இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்து வந்தார்கள்.
13நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகள் ஞான திருஷ்டிக்காரர் எல்லாரையுங்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் திடச்சாட்சியாய் எச்சரித்துக்கொண்டிருந்தும்,
14அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,
15அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடேபண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று,
16தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள்.
17அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.
18ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா கோத்திரம் மாத்திரமே மீதியாயிற்று.
19யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்.
20ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார்.
21இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான்.
22அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,
23கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
24அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பவார்யிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.
25அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.
26அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்.
27அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.
28அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.
29ஆனாலும் அந்தந்த ஜாதி தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, அந்தந்த ஜாதியார் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர் உண்டுபண்ணின மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள்.
30பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,
31ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகனித்து வந்தார்கள்.
32அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.
33அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள்.
34இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை.
35கர்த்தர் இவர்களோடே உடன்படிக்கைபண்ணி, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்களுக்குப் பலியிடாமலும்,
36உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,
37அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
38நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும்,
39உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.
40ஆனாலும் அவர்கள் செவிகொடாமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.
41அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.
1துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,
2ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.
3ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.
4நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,
5நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
6தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,
7அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
8இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
9புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
10வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு.
11அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
12நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
13நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு.
14நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.
15என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
1இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள்.
2அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நாசமாக்குவார்.
3நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்.
4பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
5சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்.
6அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல் தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான்.
7சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.
8இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.
9இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள் முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள்.
10நான் அவர்களை தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள்.
11எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
12நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
13அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.
14ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.
15உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.
1என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.
2என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.
3உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.
4கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோகும்.
7அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.
8கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.
1கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
7இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
8அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களின்றும் மீட்டுக்கொள்வார்.
1கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.
2தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
3இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com