1இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
2அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.
3அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
4அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
5அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.
6அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.
7ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.
8அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்.
9இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்.
10மூன்றுவருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.
11அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
12அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், அவருடைய உடன்படிக்கையையும் கர்த்தரின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதற்குச் செவிகொடாமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.
13யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.
14அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.
15ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
16அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா கர்த்தருடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான்.
17ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,
18ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
19ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
20யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
21இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.
22நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
23நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.
24கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?
25இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.
26அப்பொழுது இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும், செப்னாவும், யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
27அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
28ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
29எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
30கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.
31எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும்,
32அவனவன் தன்தன் திராட்சச்செடியின் கனியையும் தன்தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன்தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்.
33ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
34ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
35கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான்.
36ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
37அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
1கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,
2பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:
3நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு,
5என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,
6உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.
7சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
8ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
9நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.
10என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
11முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.
12அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
13சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.
14ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.
15அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.
16எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்கு சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்!
17ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
18அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
19பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
20ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.
21நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.
22மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
23கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
24என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
25நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
1இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
2அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.
3நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.
4மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.
5மனந்திரும்பமாட்டோமென்றதினால் அவர்கள் எகிப்து தேசத்துக்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா.
6ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை நிர்மூலம்பண்ணி, அவர்களைப் பட்சிக்கும்.
7என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை.
8எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
9என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாகவரேன்.
10அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.
11எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12எப்பிராயீமர் பொய்களினாலும், இஸ்ரவேல் வம்சத்தார் வஞ்சகத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; யூதாவோவெனில் இன்னும் தேவனோடே அரசாண்டு, பரிசுத்தவான்களோடே உண்மையாயிருக்கிறான்.
1கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
2அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,
3என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை,
4என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
5கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனைபண்ணினான்.
6இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.
7அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.
8கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
9உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக.
10நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும்.
11உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும்,
12உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
13கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
14இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம் பண்ணுவேன்.
15அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
16அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துவேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.
17அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்.
18அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன் மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
1இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
2அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,
3எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
1இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
2உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
3வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com