‹ முகப்புமுழுத் திட்டம்

நவம்பர் 7 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்நவம்பர் 7அடுத்த நாள் ›
குடும்பம்

II இராஜாக்கள் 20

முழு அதிகாரம் ›

1அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

3ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

4ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

5நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.

6உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார்.

7பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.

8எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.

9அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப்பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.

10அதற்கு எசேக்கியா: சாயை பாத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான்.

11அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.

12அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.

13எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.

14அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.

15அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

16அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்.

17இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

18நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

19அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

20எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

21எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.

2ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,

3முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

4அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

5இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.

6ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?

7அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.

8சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.

9என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

10ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.

11எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:

12உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்;

13நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.

14ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,

15ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

16ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.

17அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.

18ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

தனிவாசிப்பு

1எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.

2இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள்.

3ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.

4நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.

5நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்.

6தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.

7ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன்.

8குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல் பட்சித்துப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.

9இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.

10எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?

11நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.

12எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.

13பிரசவஸ்திரீயின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பேறுகாலமட்டும் அவன் நிற்கவில்லை.

14அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.

15இவன் சகோதரருக்குள்ளே ஜனம் பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.

16சாமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.

சங்கீதம் 137-138

முழு அதிகாரம் ›
சங்கீதம் 137

1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

2அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.

3எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

4கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

5எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.

6நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

7கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

8பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

9உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

சங்கீதம் 138

1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;

4கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.

5கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.

6கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.

7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.

8கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com