‹ முகப்புமுழுத் திட்டம்

நவம்பர் 8 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்நவம்பர் 8அடுத்த நாள் ›
குடும்பம்

II இராஜாக்கள் 21

முழு அதிகாரம் ›

1மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின் பேர் எப்சிபாள்.

2கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,

3தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.

4எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,

5கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,

6தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.

7இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என்நாமத்தை என்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லிக் குறித்த ஆலயத்திலே அவன் பண்ணின தோப்புவிக்கிரகத்தை வைத்தான்.

8நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.

9ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.

10ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது:

11யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் நரகலான விக்கிரகங்களால் யூதாவையும் பாவஞ்செய்யப்பண்ணினபடியினால்,

12இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி,

13எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.

14அவர்கள் தங்கள் பிதாக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குக் கோபம் மூட்டிவந்தபடியினால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.

15தங்கள் பகைஞருக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாய்ப் போவார்கள் என்றார்.

16கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.

17மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

18மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரமனைத் தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய ஆமோன் ராஜாவானான்.

19ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத்.

20அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,

21தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டு,

22கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான்.

23ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.

24அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

25ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

26அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான்.

1இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;

2மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.

3வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்.

4ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.

5சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.

6கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.

7ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,

8வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.

9அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.

10ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;

11என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

12சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

13உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

14நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.

15இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.

16கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?

17மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.

18பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?

19ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்.

தனிவாசிப்பு

1இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.

2வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.

3அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.

4நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று.

5நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.

6அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.

7அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.

8இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம் போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்.

9இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.

சங்கீதம் 139

முழு அதிகாரம் ›

1கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.

2என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

3நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

4என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

5முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.

6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.

7உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?

8நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

9நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,

10அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.

11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.

12உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.

13நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.

14நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

15நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.

16என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

17தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.

18அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.

19தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.

20அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.

21கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?

22முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.

23தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

24வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com