‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 13 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 13அடுத்த நாள் ›
குடும்பம்

I இராஜாக்கள் 16

முழு அதிகாரம் ›

1பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்:

2நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால்,

3இதோ, நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துப்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.

4பாஷாவின் சந்ததியிலே பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றார்.

5பாஷாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

6பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

7பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்குச் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதினிமித்தமும், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும் அவன் வீட்டுக்கும் விரோதமாக ஆனானியின் குமாரனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் கர்த்தருடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.

8யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான்.

9இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறிகொண்டிருக்கையில்,

10சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

11அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை.

12அப்படியே பாஷாவும், அவன் குமாரனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும்,

13கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.

14ஏலாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

15யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்; ஜனங்கள் அப்பொழுது பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறங்கியிருந்தார்கள்.

16சிம்ரி கட்டுப்பாடுபண்ணி, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே பாளயமிறங்கின ஜனங்கள் கேட்டபோது, இஸ்ரவேலரெல்லாம் அந்நாளிலேதானே பாளயத்திலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேல்மேல் ராஜாவாக்கினார்கள்.

17அப்பொழுது உம்ரியும் அவனோடேகூட இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றிக்கை போட்டார்கள்.

18பட்டணம் பிடிபட்டதைச் சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து, தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி, அதிலே செத்தான்.

19அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவன் பாவத்திலும் நடந்ததினால், கட்டிக்கொண்ட அவனுடைய பாவங்களினிமித்தம் அப்படி நடந்தது.

20சிம்ரியின் மற்ற வர்த்தமானங்களும், அவன் பண்ணின அவனுடைய கட்டுப்பாடும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

21அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து, பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி ஜனங்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள்.

22ஆனாலும் கீனாத்தின் குமாரனாகிய திப்னியைப் பின்பற்றின ஜனங்களைப்பார்க்கிலும், உம்ரியைப் பின்பற்றின ஜனங்கள் பலத்துப்போனார்கள்; திப்னி செத்துப்போனான்; உம்ரி அரசாண்டான்.

23யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறு வருஷம் அரசாண்டு,

24பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைச் தரித்தான்.

25உம்ரி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கேடாய் நடந்து,

26நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் சகல வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தங்கள் வீணான விக்கிரகங்களாலே கோபம் மூட்டும்படியாய் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவங்களிலும் நடந்தான்.

27உம்ரி செய்த அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

28உம்ரி தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, சமாரியாவிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

29யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.

30உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

31நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,

32தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான்.

33ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.

34அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.

கொலோசெயர் 3

முழு அதிகாரம் ›

1நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

2பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

3ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

4நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.

5ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

6இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.

7நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.

8இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.

9ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,

10தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

11அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.

12ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

13ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

14இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

15தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.

16கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

17வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

18மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.

19புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.

20பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.

21பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.

22வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.

23நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,

24எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.

25அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 46

முழு அதிகாரம் ›

1கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.

2அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.

3தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்.

4அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.

5ஆட்டுக்கடாவோடே போஜனபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே போஜனபலியாகத் தன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.

6மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,

7போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.

8அதிபதி வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாய்ப்பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.

9தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்கு வாசல்வழியாயப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல்வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.

10அவர்கள் உட்பிரவேசிக்கும்போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும் கூடப் புறப்படுவானாக.

11பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும்.

12அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வு நாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதான பலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.

13தினந்தோறும் ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும்.

14அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொறுபங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.

15இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.

16கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.

17அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.

18அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.

19பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.

20அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.

21பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.

22பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.

23இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.

24அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.

சங்கீதம் 102

முழு அதிகாரம் ›

1கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.

2என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.

3என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது.

4என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.

5என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.

7நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.

8நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.

9நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.

10ஆதலால், நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.

11என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.

12கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

13தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

14உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.

15கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.

16திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.

17அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.

18பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.

19கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

20தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.

21கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,

22சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.

23வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.

24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

25நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.

26அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.

27நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.

28உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com