‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 12 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 12அடுத்த நாள் ›
குடும்பம்

I இராஜாக்கள் 15

முழு அதிகாரம் ›

1நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின் மேல் ராஜாவாகி,

2மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

3தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.

4ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலைநிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.

5தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்று தவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து வந்தான்.

6ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

7அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

8அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

9இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி,

10நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

11ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

12அவன் இலச்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,

13தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.

14மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது.

15தன் தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

16ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

17ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.

18அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:

19எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான்.

20பெனாதாத், ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரோத் அனைத்தையும் நப்தலியின் முழுத்தேசத்தோடுங்கூட முறிய அடித்தான்.

21பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவிலிருந்து விட்டான்.

22அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.

23ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது.

24ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.

25யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்.

26அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.

27இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.

28பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

29அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தமும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,

30அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.

31நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

32ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

33யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு,

34கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.

கொலோசெயர் 2

முழு அதிகாரம் ›

1உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.

2அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

3அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.

4ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

5சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.

6ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,

7நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.

8லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.

9ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.

10மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.

11அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.

12ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

13உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;

14நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;

15துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

16ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

17அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

18கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப்பற்றிக்கொள்ளாமல்,

19மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.

20நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,

21மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?

22இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.

23இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 45

முழு அதிகாரம் ›

1நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்.

2இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.

3இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்.

4தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியருடையது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும்.

5பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகள் இருக்கவேண்டும்.

6பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் காணியாட்சியாக ஐயாயிரங்கோல் அகலத்தையும் இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் சொந்தமாயிருக்கும்.

7பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்கு முன்பாகவும், நகரத்தின் காணிக்கு முன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலே கீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல் எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும்.

8இது அவனுக்கு இஸ்ரவேலிலே காணிபூமியாக இருக்கக்கடவது; என் அதிபதிகள் இனி என் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத்தக்கதாக விட்டுவிடுவார்களாக.

9கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

10சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவு குடமும் உங்களுக்கு இருக்கக்கடவது.

11மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும். அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.

12சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.

13நீங்கள் செலுத்தவேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள்.

14அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்து அளவுகுடம் ஒரு கலமாகும்.

15இஸ்ரவேல் தேசத்திலே நல்ல மேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இருநூறு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

16இஸ்ரவேலின் அதிபதிக்கு முன்பாக தேசத்தின் ஜனங்களெல்லாரும் இந்தக் காணிக்கையைச் செலுத்தக் கடனாளிகளாயிருக்கிறார்கள்.

17இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக்குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வு நாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக.

18கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம் மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டு வந்து, பரிசுத்த ஸ்தலத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

19பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசக்கடவன்.

20பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

21முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும்.

22அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக.

23ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக.

24ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.

25ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன்.

சங்கீதம் 99-101

முழு அதிகாரம் ›
சங்கீதம் 99

1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக.

2கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர்.

3மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.

4ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

5நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.

6அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு அருளினார்.

7மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.

8எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.

9நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.

சங்கீதம் 100

1பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

2மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.

3கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

4அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

5கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

சங்கீதம் 101

1இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

2உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.

3தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

4மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.

5பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

7கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.

8அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com