1அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
2அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் சமாரியாவிலே கொடிதாயிருந்தது.
3ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.
4யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்து வந்தான்.
5ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.
6அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.
7ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;
8அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்.
9அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
10உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.
11இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
12நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்று போடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயது முதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்.
13யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
14இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.
15அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
16அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
17ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
18அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
19இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
20அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.
21அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
22அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.
23இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக்கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.
24நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.
25அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
26தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
27மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
28அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
29மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
30அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு:
31உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
32அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,
33விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான்.
34பிற்பாடு அவன்: நீங்கள் நாலு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.
35அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
36அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
37கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
38அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
39ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
40அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
41பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
42ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,
43தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
44ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.
45அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
46கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்கு முன் ஓடினான்.
1பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
2தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
3நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
4எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
5எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
6நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
7இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.
8எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று.
9ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
10அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.
1கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும்,
2தாணின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும்,
3ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும்,
4நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும்,
5மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,
6எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும்,
7ரூபனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக.
8யூதாவின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருக்கும்; இது, இருபத்தையாயிரங்கோல் அகலமும், கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
9இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக.
10வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
11இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
12அப்படியே தேசத்தில் அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.
13ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.
14அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
15இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக.
16அதின் அளவுகளாவன; வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம்.
17நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக.
18பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக.
19இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள்.
20அர்ப்பிதநிலமனைத்தும் இருபத்தையாயிரங்கோல் நீளமும், இருபத்தையாயிரங்கோல் அகலமுமாய் இருக்கக்கடவது; பட்டணத்தின் காணி உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலம் சதுரமாய் இருக்கவேண்டும்.
21பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
22அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது.
23மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும்,
24பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் சிமியோனுக்கு ஒரு பங்கும்,
25சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும்,
26இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும்,
27செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக.
28காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார்துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும் பெரிய சமுத்திரமட்டாகவும் போகும்.
29சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
30நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
31நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
32கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
33தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல், இசக்காருக்கு ஒரு வாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
34மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
35சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.
1என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
2ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.
4தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
5பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.
6அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
8அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
9அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
10அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
11அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
12அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்.
13தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.
14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
15மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.
16கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
17அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
18உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
20நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.
21பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித்தேடும்.
22சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.
23அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.
24கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
25பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
26அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
27ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
28நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
29நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
30நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
31கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.
32அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத் தொட, அவைகள் புகையும்.
33நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
35பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com