1எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
2அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள்.
3அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.
4அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,
5ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்.
6அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்.
7கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.
8அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான்.
9அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.
10அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
11அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.
12பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று.
13அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
14அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
15அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி,
16பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.
17சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்.
18ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
19அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.
20அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.
21அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.
1சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
2உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
3எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.
4சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
5உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.
6நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
7உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,
8நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.
9சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
10விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
11மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று,
12தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
13ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர்வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.
14எப்படியெனில், சகோதரரே, யூதேயாதேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.
15அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,
16புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.
17சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.
18ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
19எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
20நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.
1யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கைபோட்டான்.
2அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.
3அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும்,
4அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.
5ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான்.
6அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.
7பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
8தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
9தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
10பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி: உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.
11அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:
12பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
13எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.
14அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.
15பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.
16ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.
17இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.
18அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.
19ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவனும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.
20ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.
21கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம்வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.
1கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
2அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
3அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
4கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
5அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
6அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
7அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
8ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
9அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
10அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்தியஉடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
11உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
12அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.
13அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.
14அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:
15நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
16அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
17அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
18அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.
19கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
20ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.
21தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
22அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.
23அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
24அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.
25தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
26தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
28அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
29அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.
30அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
32அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.
33அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
34அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
35அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
36அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.
37அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
38எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
39அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.
40கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
41கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.
42அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
43தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி,
44தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
45அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com