1சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது.
2மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும்போது,
3இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,
4யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
5பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
6அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
7பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.
8அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
9அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.
10இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
11கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
12சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
13மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.
14அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
15அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: "போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்" என்றான்.
16ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.
17அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
18அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.
19அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
20அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
21அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.
22எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.
23ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
24அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.
25அதற்கு மிகாயா: நீ ஒளித்துக் கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
26அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் குமாரனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய்,
27இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே வருமளவும், இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
28அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான்.
29பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
30இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான்.
31சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பதிரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடே மாத்திரம் யுத்தம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
32ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனுக்கு நேராகச் சாய்ந்து வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்.
33இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள்.
34ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள்பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.
35அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்து போனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.
36பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும், போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.
37அப்படியே ராஜா இறந்தபின்பு, சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்.
38அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது.
39ஆகாபின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின தந்த அரமனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
40ஆகாப் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய அகசியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
41ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
42யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்.
43அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
44யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான்.
45யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணினயுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
46தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.
47அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.
48பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோயின.
49அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.
50யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
51ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
52கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைத் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து,
53பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான்.
1சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
2இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
3சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
4சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.
5நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
6ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.
7தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.
8பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
9தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
10நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.
11ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
12அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
13அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
14மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
15ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.
16எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
18எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
19ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
20தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
21எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
22பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.
23சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
24உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
25சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
26சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
27இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
1ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.
2உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.
3அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்தியராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
4நேபுகாத்நேச்சாராகிய நான் என் வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து என் அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தேன்.
5நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.
6ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோன் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
7அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னேன்; ஆனாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.
8கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:
9சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு.
10நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.
11அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.
12அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.
13நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.
14அவன் உரத்த சத்தமிட்டு: இந்த விருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும்.
15ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.
16அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும்.
17உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.
18நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே; இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக்கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.
19அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பேருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேணடியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.
20நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.
21அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது.
22அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.
23இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியில் நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.
24ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்.
25உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்துபோகவேண்டும்.
26ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்.
27ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்.
28இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.
29பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:
30இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
31இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.
32மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது.
33அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
34அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
35பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
36அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.
37ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
1தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்.
2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
3கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.
7தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.
9மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
10அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
11எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
12இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
13தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
1நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
2துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
4என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
6அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
8அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.
9அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
10அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
11கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.
12அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமலும்போவார்களாக.
13அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.
14அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.
15அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
16அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போகும்.
18சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
19அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.
20இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்.
21ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
22நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
23சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
24உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
25நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
26என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
27இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.
29என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
30கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
31ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com