1இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது.
2ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.
3நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.
4இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய்த் தன் வீட்டிற்கு வந்து, போஜனம் பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
5அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம் பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
6அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க் கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப் பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான்.
7அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.
8அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள்.
9அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,
10தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
11அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.
12அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.
13அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,
14பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
15நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப் போனான் என்றாள்.
16நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.
17கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
18நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்.
19நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
20அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
21நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து,
22நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
23யேசேபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரவேலின் மதில் அருகே தின்னும்.
24ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்றார்.
25தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
26கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்று துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம், அவன் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பாய் நடந்துகொண்டான்.
27ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
28அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
29ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.
1அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்னபிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
2கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.
3நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
4தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
5உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப்பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
6இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
7தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
8ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
9சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
10அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;
11புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
12நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
13அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
14இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
15கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
16ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
17பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
18ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
1ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறுமுழ அகலமுமான ஒருபொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.
2பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.
3அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.
4கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:
5எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.
6எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.
7ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.
8அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி,
9ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
10எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும்,
11எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.
12பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
13அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,
14நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?
15இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
16சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவுசொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
17நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
18விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
19அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,
20சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலேபோடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
21அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், நிசார்களோடும், பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
22ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.
23சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
24அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
25அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
26அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
27தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷனுடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
28அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
29ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்த பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.
30பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
1கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
3கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள்.
4அவர்கள் தாபரிக்கும் ஊரைக்காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய்,
5பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.
6தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
7தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
8தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
9அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
11அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.
12அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்து போனார்கள்.
13தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.
14அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.
15கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
16அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
17நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
18அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.
19தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
21அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
22ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.
23கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
24அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
25அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.
26அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.
27வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
28அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
29கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
30அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
31அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதியசயங்களினிமித்தமும் துதித்து,
32ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
33அவர் ஆறுகளை அவாந்தரவெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,
34குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார்.
35அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
36பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
37வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
38அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.
39பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
40அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சிவரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
41எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
42உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
43எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com