1சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.
2சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
3அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.
4அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான்.
5அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத்தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய்,
6இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது.
7இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.
8இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான்.
9அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.
10அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.
11அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.
12நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.
13அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம்பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.
14அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.
15அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.
16அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.
17அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.
18ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.
19அதற்கு அவன்: சமாதானத்தோடே போ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,
20தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,
21நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.
22அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான்.
23அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்றுவஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரரான இரண்டுபேர்மேல் வைத்தான்.
24அவன் மேட்டண்டைக்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.
25பின்பு அவன் உள்ளேபோய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.
26அப்பொழுது அவன் இவனைப்பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
27ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப்போனான்.
1நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்;
2நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
5தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
7இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிறபோதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
8அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
9ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
10தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
11ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.
12உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
13என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
14மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
15அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
1கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,
2தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.
3நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,
4என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே.
5நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்.
6உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.
7ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே. வெட்கம் எங்களுக்கே உரியது.
8ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.
9அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.
10ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
11இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.
12எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.
13மோசேயின் நியாயப்பிரமாணப்புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களைவிட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை.
14ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.
15இப்போதும் உமது ஜனத்தைப்பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்குக் கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்.
16ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தபர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.
17இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.
18என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.
19ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும், என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்.
20இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.
21அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.
22அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன்.
23நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.
24மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
25இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
26அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
27அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
1ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
2அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
1கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.
3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
5நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
6கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?
7எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
8மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
9பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
10எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்.
14கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
16கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
17நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.
18கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
20கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.
21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.
22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
23அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
24இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
25கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
26கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
27கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
29கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com