‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 28 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 28அடுத்த நாள் ›
குடும்பம்

II இராஜாக்கள் 9

முழு அதிகாரம் ›

1அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைகட்டிக்கொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.

2நீ அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,

3தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான்.

4அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான்.

5அவன் உட்பிரவேசித்தபோது, சேனாபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களெல்லாருக்குள்ளும் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாபதியாகிய உமக்குத்தான் என்றான்.

6அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் வார்த்து, அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன்.

7நான் என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த்தருடைய சகல ஊழியக்காரரின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படிக்கு நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடக்கடவாய்.

8ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படிக்கு, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர் விடும் ஒரு நாய் முதலாய் இராதபடிக்கு, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் கருவறுத்து,

9ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சரியாக்குவேன்.

10யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்பண்ணுகிறவன் இல்லையென்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.

11யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனுஷனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.

12அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.

13அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.

14அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் குமாரன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினான்; யோராமோ இஸ்ரவேலர் எல்லாரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்துவைத்தான்.

15ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணினயுத்தத்திலே, சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்; இது உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப்போகும்படி விடாதிருங்கள் என்றான்.

16அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாய்க் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.

17யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைப் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.

18அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்.

19ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான்.

20அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.

21அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.

22யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்.

23அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.

24யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.

25அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறிவருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.

26நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.

27இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப்போனான்.

28அவனுடைய ஊழியக்காரர் அவனை இரதத்தின்மேல் எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவன் பிதாக்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

29இந்த அகசியா, ஆகாபுடைய குமாரனாகிய யோராமின் பதினோராம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.

30யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து,

31யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள்.

32அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.

33அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,

34உள்ளேபோய், புசித்துக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.

35அவர்கள் அவளை அடக்கம்பண்ணப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.

36ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைச் தின்னும் என்றும்,

37இன்னது யேசபேலென்று சொல்லக்கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.

I தீமோத்தேயு 6

முழு அதிகாரம் ›

1தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக்கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள்.

2விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.

3ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,

4அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,

5கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

6போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

7உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.

8உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.

9ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.

10பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

11நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.

12விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாயிருக்கிறாய்.

13நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,

14எல்லாவற்றையும் உயிரோடிருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

15அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,

16ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

17இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும்,

18நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,

19நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.

20ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.

21சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.

தனிவாசிப்பு

1யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.

2கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.

3அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

4அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.

5அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.

6அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.

7யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.

8அவள் லோருகாமாவை முலைமறக்கப்பண்ணினபிற்பாடு, கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்.

9அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.

10என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்லுவதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

11அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.

சங்கீதம் 119:73-96

முழு அதிகாரம் ›

73உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

74நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.

75கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

76நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.

77நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

78அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

79உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.

80நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.

81உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

82எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.

83புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

84உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்?

85உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.

86உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.

87அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.

88உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.

89கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

90உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.

91உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.

92உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.

93நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.

94நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.

95துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

96சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com