1ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.
2அதில்: உங்கள் ஆண்டவனுடைய குமாரர்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், அரணான பட்டணமும் ஆயுதங்களும் உங்களுக்கு உண்டே.
3இப்போதும் இந்த நிருபம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய குமாரரில் உத்தமமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் ஆண்டவனுடைய குடும்பத்துக்காக யுத்தம்பண்ணுங்கள் என்று எழுதியிருந்தது.
4அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.
5ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.
6அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரரின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.
7இந்த நிருபம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் குமாரராகிய எழுபது பேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
8அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.
9மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?
10ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.
11யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச் சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்டான்.
12பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது,
13யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.
14அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டுபேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.
15அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
16நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
17அவன் சமாரியாவுக்கு வந்தபோது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவும் சங்காரஞ்செய்தான்.
18பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
19இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.
20பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள்.
21யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினபடியினால், பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது.
22அப்பொழுது அவன், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவந்தான்.
23பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரே அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்.
24அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
25சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும் போய்,
26பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
27பாகாலின் சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல மலஜலாதி இடமாக்கினார்கள்.
28இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்.
29ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.
30கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.
31ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.
32அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,
33யோர்தான் துவக்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்குச் சமீபமான ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காதியர், ரூபேனியர், மனாசேயர் இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தான்.
34யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
35யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம் பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
36யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் இருபத்தெட்டு வருஷம்.
1கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
2பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
4உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
5அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
6இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
7தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
8ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி.
9அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
10நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
11அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.
12அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
13நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
14உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
15ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
16ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங்கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
17அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
18அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பற்பல உதவிகளையும் நீ நன்றாய் அறிந்திருக்கிறாயே.
1உங்கள் சகோதரரைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள்.
2உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும், தன் விபசாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்.
3இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக உரிந்து, அவள் பிறந்தநாளில் இருந்தவண்ணமாக அவளை நிறுத்தி, அவளை அந்தரவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகப்பண்ணுவேன்;
4அவளுடைய பிள்ளைகள் சோரப்பிள்ளைகளாகையால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன்.
5அவர்களுடைய தாய் சோரம்போனாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இலச்சையான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுமயிரையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என் நேசர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள்.
6ஆகையால், இதோ, நான் உன் வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக்கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.
7அவள் தன் நேசர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின புருஷனிடத்துக்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள்.
8தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.
9ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.
10இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை.
11அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன்.
12என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.
13அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்திலே அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி,
15அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.
16அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
17பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும்.
18அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.
19நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.
20உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்.
21அக்காலத்தில் நான் மறுமொழி கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு மறுமொழி கொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும்.
22பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழிகொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்.
23நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.
97உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்.
98நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
99உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.
100உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
101உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
102நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
103உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
104உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
105உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
106உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
107நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
108கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
109என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
110துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன்.
111உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
112முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.
113வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
114என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
115பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
116நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.
117என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.
118உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.
119பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
120உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com