‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 3 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 3அடுத்த நாள் ›
குடும்பம்

I இராஜாக்கள் 6

முழு அதிகாரம் ›

1இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.

2சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது.

3ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபதுமுழ நீளமும், ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது.

4பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.

5அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச் சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.

6கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்துமுழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறுமுழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காதபடிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.

7ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.

8நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.

9இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுரு மர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.

10அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.

11அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்:

12நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,

13இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.

14அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.

15ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம் தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.

16தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபதுமுழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதிஸ்தானமாகக் கட்டினான்.

17அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.

18ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.

19கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதிஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்.

20சந்நிதிஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.

21ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, சந்நிதிஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான்.

22இப்படி ஆலயம் முழுவதும் கட்டித்தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதிஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.

23சந்நிதிஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுமாயிருந்தது.

24கேருபீனுக்கு இருக்கிற ஒருசெட்டை ஐந்துமுழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனை தொடங்கி மற்றச் செட்டையின் கடைசி முனை மட்டும் பத்துமுழமாயிருந்தது.

25மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.

26ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.

27அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரித்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒரு பக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.

28அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.

29ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.

30உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.

31சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது.

32ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன்தகட்டால் மூடினான்.

33இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.

34அதின் இரண்டு கதவுகளும் தேவதாரிப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.

35அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.

36அவன் உட்பிரகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.

37நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,

38பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒருபங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.

1இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.

2உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே;

3அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.

4இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.

5அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;

6இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.

7தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.

8பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

9தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,

10உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக,

11இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

12அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.

13ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.

14இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய,

15நம்முடைய கர்த்தாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,

16நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,

17விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,

18சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;

19அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

20நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

21சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 36

முழு அதிகாரம் ›

1மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

2கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; பகைஞன் உங்களைக்குறித்து ஆ ஆ, நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால்,

3நீ தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப் பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,

4இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட அவாந்தர இடங்களுக்கும், வெறுமையாய் விடப்பட்ட பட்டணங்களுக்கும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான புறஜாதிகளுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாய்ப்போனபடியினால்,

5கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என் தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படிக்கு அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் கர்வமான மனதோடும் தங்களுக்குச் சுதந்தரமாக நியமித்துக்கொண்ட புறஜாதிகளில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என் அக்கினியான எரிச்சலினால் பேசினேன் என்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

6ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, நீங்கள் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என் எரிச்சலினாலும் என் உக்கிரத்தினாலும் பேசினேன்,

7ஆதலால், கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய்ச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன்.

8இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்கள் கொப்புகளைவிட்டு, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு உங்கள் கனிகளைக் கொடுப்பீர்கள்; அவர்கள் சமீபமாய் வந்துவிட்டார்கள்.

9இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.

10நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.

11உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

12நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.

13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,

14நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

15நான் இனிமேல் புறஜாதிகள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கப்பண்ணுவதுமில்லை, நீ ஜனங்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன் ஜாதிகளைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

16பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

17மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.

18ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி,

19அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்.

20அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்தநாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

21ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் தாங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்தநாமத்தினிமித்தமாகவே இரங்குகிறேன்.

22ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தம் அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.

23புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

24நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.

25அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.

26உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

27உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.

28உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து,

29உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகப்பண்ணி,

30நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.

31அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.

32நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள்.

33கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும்.

34பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.

35பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

36கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.

37கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.

38பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.

1கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.

2என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.

3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

5ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

6கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.

7நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.

8ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

9ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.

10தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

11கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.

12என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.

13நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

14தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.

15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

17கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com