‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 2 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 2அடுத்த நாள் ›
குடும்பம்

I இராஜாக்கள் 4-5

முழு அதிகாரம் ›
I இராஜாக்கள் 4

1ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாயிருந்தான்.

2அவனுக்கு இருந்த பிரபுக்கள்: சாதோக்கின் குமாரனாகிய அசரியா பிரதான மந்திரியாயிருந்தான்.

3சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான்.

4யோய்தாவின் குமாரன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாயிருந்தார்கள்.

5நாத்தானின் குமாரன் அசரியா மணியகாரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான்.

6அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனீராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.

7ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும் வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள்.

8அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத் தேசத்தில் இருந்தான்.

9தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.

10ஏசேதின் குமாரன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோகோவும் எப்பேர் சீமையனைத்தும் இவன் விசாரிப்பில் இருந்தது.

11அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.

12அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும் யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.

13கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.

14இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.

15அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.

16ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.

17பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.

18ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.

19ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.

20யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக்குடித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

21நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள்.

22நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,

23கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுக்கப்பட்ட பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாம்.

24நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது.

25சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.

26சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக்குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.

27மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,

28குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்.

29தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.

30சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும்பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.

31அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.

32அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.

33லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.

34சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.

I இராஜாக்கள் 5

1சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.

2அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:

3என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.

4ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.

5ஆகையால்: நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே, என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.

6ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.

7ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு: அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி;

8ஈராம் சாலொமோனிடத்தில் மனுஷரை அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுருமரங்களுக்காகவும், தேவதாரி விருட்சங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன்.

9என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன்; அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.

10அப்படியே ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான்.

11சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக இருபதினாயிரக்கலம் கோதுமையையும், இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் இருபதுகல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்துவந்தான்.

12கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம்உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

13ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைப் பிடித்தான்.

14அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்குப் பதினாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த அமஞ்சி ஆட்களின்மேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.

15சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் எழுபதினாயிரம்பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரம்பேரும்,

16இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.

17வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்.

18ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும், கிபலி ஊராரும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.

1அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

2அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

3அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

4தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

5அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;

6கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,

7கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

8கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

9ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

10ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

11ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள்,

12அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.

13முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

14எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,

15சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,

16பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

17அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.

18அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.

19ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

20அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

21அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

22அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 35

முழு அதிகாரம் ›

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

3அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.

4உன் பட்டணங்களை வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.

5நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,

6நான் இரத்தப்பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுக்காதபடியினால் இரத்தம் பின்தொடரும்.

7நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,

8அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.

9நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

10இரண்டு ஜாதிகளும் இரண்டு தேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,

11நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குத்தக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை நியாயந்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

12இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.

13நீங்கள் உங்கள் வாயினால் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்கள் வார்த்தைகளைப் பெருகப்பண்ணினீர்கள்; அதை நான் கேட்டேன்.

14பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

15இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர்மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.

1கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

2உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)

3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.

4எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.

5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?

6உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?

7கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.

8கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.

9நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.

10கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

11சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.

12கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.

13நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com