‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 6 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 6அடுத்த நாள் ›
குடும்பம்

I இராஜாக்கள் 9

முழு அதிகாரம் ›

1சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

2கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்.

3கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

4நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்,

5இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

6நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,

7நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் இருப்பார்கள்.

8அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு: கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

9அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டு. வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

10சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே,

11தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

12ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.

13அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கி வருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.

14ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.

15பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.

16கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர் பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.

17சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்,

18பாலாத்தையும், வனாந்தர வெளியிலுள்ள தத்மோரையும்,

19தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.

20இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக்கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமான சகல ஜனத்திலும்,

21அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சி வேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.

22இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுக்குப் பணிவிடைக்காரரும், பிரபுக்களும், சேர்வைக்காரரும், இரதவீரரும், குதிரைவீரருமாயிருந்தார்கள்.

23ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

24பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான்.

25சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தை முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டு, கர்த்தரின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபங்காட்டிவந்தான்.

26ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்.

27அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான்.

28அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

1பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.

2உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,

3உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.

4பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.

5வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;

6மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.

7அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து,

8மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.

9எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.

10கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

11நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

12ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

13ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

14சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

15சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;

16பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

17இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

18எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

19சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,

20நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.

21அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.

22நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்.

23பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக.

24நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 39

முழு அதிகாரம் ›

1இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாகவருகிறேன்.

2நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி,

3உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை வலது கையிலிருந்து விழப்பண்ணுவேன்.

4நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன்.

5விசாலமான வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

6நான் மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

7இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக் குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.

8இதோ, அது வந்து, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.

9இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியேபோய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழு வருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.

10அவர்கள் வெளியிலிருந்து விறகு கொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

11அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாக கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்.

12இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதம் செல்லும்.

13தேசத்தின் ஜனங்களெல்லாரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்நாளிலே அது அவர்களுக்குக் கீர்த்தியாக இருக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

14தேசத்தைச் சுத்தம்பண்ணுவதற்காக அதில் கிடக்கும் மற்ற பிரேதங்களைப் புதைக்கும்படிக்கு நித்தமும் தேசத்தில் சுற்றித்திரியும் மனுஷரையும், சுற்றித்திரிகிறவர்களோடேகூடப் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழுமாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.

15தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக் காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.

16அந்த நகரத்துக்கு ஆமோனா என்று பெயரிடப்படும்; இவ்விதமாய் தேசத்தைச் சுத்தம் பண்ணுவார்கள்.

17மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.

18நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள்.

19நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று, வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள்.

20இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும், இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

21இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும் அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளும் காண்பார்கள்.

22அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்துகொள்வார்கள்.

23இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித்தமே சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள்.

24அவர்களுடைய அசுத்தத்துக்குத்தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.

25ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:

26அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன்.

27நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,

28தங்களைப் புறஜாதிகளிடத்தில் சிறைப்பட்டுப்போகப்பண்ணின நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்கள் சுயதேசத்திலே திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன் என்பதினால், நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

29நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

1ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

2பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.

3நீர் மனுஷரை நீர்த்துளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர்.

4உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.

5அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

6அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோகும்.

7நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.

8எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.

9எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்.

10எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாய்க் கடந்து போகிறது நாங்களும் பறந்துபோகிறோம்.

11உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்?

12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

13கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.

14நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

15தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.

16உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.

17எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com