1கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,
2மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலோமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
3அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
4சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,
5அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவன் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,
6ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.
7நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.
8உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
9உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.
10அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.
11ஓப்பீரிலிருந்து பொன்னைக்கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.
12அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனை மரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை.
13ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய்ச் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
14சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபிதேசத்து சகல ராஜாக்களாலும், மாகாணங்களின் அதிபதிகளாலும் வந்த பொன்னையல்லாமல்,
15ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.
16சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.
17அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
18ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
19அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.
20ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.
21ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
22ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
23பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
24சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.
25வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டு வருவார்கள்.
26சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்துநானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
27எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
28சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
29எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.
1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:
2நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,
4நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,
5உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
6நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
7என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.
8இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
9மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,
10தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
11நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
12சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
13அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,
14சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
15சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
16சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
17சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
18இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
19அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.
20நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
21கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
22ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
23ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
24அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
25இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,
26உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.
27நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.
28நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
29ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
30நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
1நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று.
2தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.
3அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலும் இருந்தது; அவர் வாசலிலே நின்றார்.
4அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக்கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.
5இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீளமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலு விரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.
6பின்பு அவர் கிழக்குமுகவாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார்.
7ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்து முழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.
8வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
9பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.
10கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது; அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.
11பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.
12அறைகளுக்குமுன்னே இந்தப் புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப் புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது ஒவ்வொரு அறை இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.
13பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்து முழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராயிருந்தது.
14தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.
15பிரவேசவாசலின் முகப்புத் துவக்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது.
16வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.
17பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.
18வாசலுக்குப் பக்கத்திலும் வாசல்களின் நீளத்துக்கு எதிரிலுமுள்ள அந்தத் தளவரிசை தாழ்வான தளவரிசையாயிருந்தது.
19பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறுமுழமாயிருந்தது.
20வெளிப்பிராகாரத்துக்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.
21அதற்கு இப்புறத்தில் மூன்று அறைகளும் அப்புறத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
22அதின் ஜன்னல்களும், அதின் மண்டபங்களும், அதின்மேல் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும், கீழ்த்திசைக்கு எதிரான வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதின்மண்டபங்கள் அவைகளுக்கு முன்னாக இருந்தது.
23வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்கள் இருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.
24பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்தது; அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.
25அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
26அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதற்கு முன்பாக அதின் மண்டபங்களும் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இந்தப்புறத்தில் ஒன்றும் அந்தப்புறத்தில் ஒன்றுமாக இருந்தது.
27உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல் துவக்கி மற்றவாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.
28பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.
29அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழுமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
30இருபத்தைந்து முழ நீளமும் ஐந்துமுழ அகலமுமான மண்டபங்கள் சுற்றிலும் இருந்தது.
31அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
32பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
33அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
34அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
35பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார்.
36அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
37அதின் தூணாதாரங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் அதின் தூணாதாரங்களில் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; அதில் ஏறுவதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
38அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூணாதாரங்களுக்கு அருகில் இருந்தது; அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள்.
39வாசலின் மண்டபத்திலே இந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் அந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் இருந்தது; அவைகளின்மேல் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் குற்றநிவாரணபலியையும் செலுத்துவார்கள்.
40வடக்குவாசலுக்குள் பிரவேசிக்கிறதற்கு ஏறிப்போகிற வெளிப்புறத்திலே இரண்டு பீடங்களும், வாசலின் மண்டபத்திலுள்ள மறுபுறத்திலே இரண்டு பீடங்களும் இருந்தது.
41வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும், அந்தப்புறத்தில் நாலு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.
42தகனபலிக்குரிய நாலு பீடங்கள் வெட்டின கல்லாயிருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாயிருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.
43நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்.
44உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாகச் சங்கீதக்காரரின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்கு வாசலின் பக்கமாக இருந்தவைகள் தென்திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.
45பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.
46வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக்காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனைசெய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார்.
47அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.
48பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்று முழமும் அந்தப்புறம் மூன்று முழமுமாயிருந்தது.
49மண்டபத்தின் நீளம் இருபது முழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களில் இந்தப்புறத்திலே ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.
1உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
2நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
4அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
5இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
6இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
7உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
8உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
9எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
11உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
12உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
13சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
14அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
16நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என், இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com