‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 14 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 14அடுத்த நாள் ›
குடும்பம்

II சாமுவேல் 10

முழு அதிகாரம் ›

1அதன் பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.

2அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயை செய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயை செய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,

3அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.

4அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.

5அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.

6அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும், கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.

7அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.

8அம்மோன் புத்திரர் புறப்பட்டு, ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்து வந்த சீரியரும், இஷ்தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும், வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள்.

9யோவாபோ இராணுவங்களின் படைமுகம் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதைக் காண்கையில், அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,

10மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து:

11சீரியர் கைமிஞ்சுகிறதாயிருந்தால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் புத்திரர் கை மிஞ்சுகிறதாயிருந்தால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன்.

12தைரியமாயிரு: நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

13யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

14சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்குள் புகுந்தார்கள்: அப்பொழுது யோவாப் அம்மோன் புத்திரரை விட்டுத் திரும்பி எருசலேமுக்கு வந்தான்.

15தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது, ஒருமிக்கக் கூடினார்கள்.

16ஆதாரேசர் நதிக்கு அப்பாலிருந்த சீரியரையும் அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனாகிய சோபாக் அவர்களுக்கு முன்னாலே சென்றான்.

17அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர் தாவீதுக்கு எதிராக இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள்; அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது,

18சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரும் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.

19அப்பொழுது ஆதாரேசரைச் சேவிக்கிற சகல ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலரோடே சமாதானம்பண்ணி, அவர்களைச் சேவித்தார்கள். அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் பயப்பட்டார்கள்.

II கொரிந்தியர் 3

முழு அதிகாரம் ›

1எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?

2எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.

3ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.

4நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.

5எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.

6புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

7எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.

8ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?

9ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

10இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.

11அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

12நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.

13மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.

14அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.

15மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.

16அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும்.

17கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

18நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 17

முழு அதிகாரம் ›

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும்கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

3கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,

4அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்துக்குக் கொண்டுபோய், அதை வர்த்தகருடைய நகரத்திலே வைத்தது;

5தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர் நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாய் நட்டது.

6அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று; அதின் கொடிகள் அந்த கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இவ்விதமாய் அது திராட்சச் செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.

7அன்றியும் பெரிய செட்டைகளையும் திரளான இறகுகளையும் உடைய வேறொரு பெரிய கழுகு இருந்தது; இதோ, அது தன் நடவாகிய பாத்திகளிலிருந்து அதற்குத் தண்ணீர் பாய்ச்சும்படி இந்த திராட்சச்செடி அதற்கு நேராகத் தன் வேர்களை விட்டு, அதற்கு நேராகத் தன் கொடிகளை வீசினது.

8கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.

9இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாய் ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் கனியை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை.

10இதோ, நடப்பட்ட இது செழிப்பாயிருக்குமோ? கொண்டல்காற்று இதின் பேரில் படும்போது இது வாடி உலர்ந்து போகாதோ? இது நடப்பட்ட பாத்திகளிலே வாடிப்போகுமென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

11பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:

12இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக் கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,

13அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி,

14ராஜ்யம் தன்னை உயர்த்தாமல் தாழ்ந்திருக்கும்படிக்கும், தன் உடன்படிக்கையை அவன் கைக்கொள்ளுகிறதினால் அது நிலைநிற்கும்படிக்கும், அவனை ஆணைப்பிரமாணத்துக்கு உட்படுத்தி, தேசத்தில் பலசாலிகளைப் பிடித்துக்கொண்டுபோனானே.

15இவன் அவனுக்கு விரோதமாய்க் கலகஞ்செய்து, தனக்குக் குதிரைகளையும் அநேகம் ஆட்களையும் அனுப்பவேண்டுமென்று தன் ஸ்தானாதிபதிகளை எகிப்துக்கு அனுப்பினான்; இப்படிப்பட்டவனுக்கு வாய்க்குமோ? இப்படிச் செய்கிறவன் தப்பித்துக்கொள்வானோ? உடன்படிக்கையை முறித்தவன் தப்பித்துக்கொள்வானோ?

16தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைபண்ணி, அவனுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜாவினுடைய ஸ்தானமாகிய பாபிலோன் நடுவிலே அவனண்டையில் இருந்து மரணமடைவானென்று என் ஜீவனைக்கொண்டுசொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

17அவன் அநேகம் ஜனங்களை நாசம்பண்ணும்படி அணைபோட்டு, கொத்தளங்களைக் கட்டும்போது, பார்வோன் பெரிய சேனையோடும், திரளான கூட்டத்தோடும் வந்து இவனுக்காக யுத்தத்தில் உதவமாட்டான்.

18இதோ, இவன் கையடித்துக் கொடுத்திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைபண்ணினான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை.

19அதினிமித்தம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என் ஆணையை அசட்டைபண்ணினதையும், என் உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

20அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என் வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாய்ப்பண்ணின துரோகத்தினிமித்தம் அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.

21அவனோடேகூட ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் பட்டயத்தால் விழுவார்கள்; மீதியானவர்களோ சகல திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள்.

22கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதத்தின்மேல் நாட்டுவேன்.

23இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளைவிட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.

24அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தார் என்று சொல் என்றார்.

சங்கீதம் 60-61

முழு அதிகாரம் ›
சங்கீதம் 60

1தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

2பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.

3உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

4சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா)

5உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.

6தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

7கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

8மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

9அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழி காட்டுகிறவர் யார்?

10எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ?

11இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.

12தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

சங்கீதம் 61

1தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.

2என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

3நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.

4நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)

5தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.

6ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.

8இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com