1இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.
2அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டு பங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.
3ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து,
4அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.
5சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
6தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
7ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
8ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீது ராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்.
9தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,
10ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும் தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.
11அவன் கொண்டு வந்தவைகளைத் தாவீது ராஜா கீழ்ப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும்,
12ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூட கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.
13தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.
14ஏதோமில் தாணையங்களை வைத்தான்; ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
15இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.
16செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
17அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.
18யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் குமாரரோ பிரதானிகளாயிருந்தார்கள்.
1யோனத்தான் நிமித்தம் என்னால் தயவு பெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
2அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ள வனைத் தாவீதினிடத்தில் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
3அப்பொழுது ராஜா: தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.
4அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
5அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.
6சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
7தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பிக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.
8அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.
9ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.
10ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்கு பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.
11சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.
12மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள்.
13மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம் பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது.
1நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்.
2நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?
3என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.
4அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மனயிடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.
5துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
6அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும்.
7ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும்.
8அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
9நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.
10எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
11சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
12மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,
13நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.
14கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
15இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.
16கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?
17அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
3கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி.
4உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.
5உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்.
6நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.
7உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன் ஸ்தனங்கள் எழும்பின, உன் மயிர் வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தாய்.
8நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து,, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கைபண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.
9நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம்பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி,
10சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச்சால்வையையும் உனக்குக் கொடுத்து,
11உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,
12உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்.
13இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய்.
14உன் அழகினாலே உன் கீர்த்தி புறஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேரபட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,
16உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச்சோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்விப்பதுமில்லை.
17நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,
18உன் சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என் எண்ணெயையும் என் தூபவர்க்கத்தையும் அவைகளின்முன் படைத்து,
19நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்தவாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
20நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.
21நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.
22நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க் கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.
23ஐயோ! உனக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புகளெல்லாம் தவிர,
24நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய்.
25நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,
26சதை பெருத்த உன் அயல் தேசத்தாராகிய எகிப்திய புத்திரரோடே வேசித்தனம்பண்ணி, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன் வேசித்தனங்களைப் பெருகப்பண்ணினாய்.
27ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக்குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
28நீ திருப்தியடையாததினால் அசீரியபுத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய்; அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை.
29நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.
30வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,
31சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல்,
32தன் புருஷனுக்குப்பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார ஸ்திரீயைப்போல இருக்கிறாய்.
33எல்லா வேசிகளுக்கும் பணையங்கொடுக்கிறார்கள்; நீயோ உன் நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே பணையங்கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய்.
34இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னைப் பின்செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே பணையம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
35ஆகையால், வேசியே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
36கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,
37இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வாணத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து,
38விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,
39உன்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன் மண்டபங்களை இடித்து, உன் மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக விட்டுப்போய்,
40உனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்கள் பட்டயங்களால் குத்திபோட்டு,
41உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.
42இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி, நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன்.
43நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்.
44இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள்.
45நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன்.
46உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை.
47ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய்.
48நீயும் உன் குமாரத்திகளும் செய்ததுபோல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
49இதோ, கர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
50அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.
51நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன் பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.
52இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள்.
53நான் சோதோமும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற அவர்களுடைய சிறையிருப்பையும், சமாரியாவும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்கள் நடுவிலே நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன்.
54அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து, நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.
55உன் சகோதரிகளாகிய சோதோமும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; சமாரியாவும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள்.
56உன்னை வெறுக்கும் சீரியாவின் குமாரத்திகளும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தரின் குமாரத்திகளும் அவமானம்பண்ணினபோது உன் பொல்லாப்பு வெளியாயிற்றே.
57அதற்குமுன் உன் கர்வத்தின் நாளிலே உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை உன் வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய்.
58உன் முறைகேட்டையும் உன் அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
59கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துப்போடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்கும் செய்வேன்.
60ஆகிலும் உன் இளவயதில் உன்னோடேபண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.
61அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.
62உன்னோடே என் உடன்படிக்கையைப்பண்ணி ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிவாய்.
63நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
1மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?
2மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
3துன்மார்க்கர் கர்ப்பத்திலே உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
4சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
5பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.
8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.
9முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.
10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
11அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.
1என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
2அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.
3இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.
4என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.
5சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா)
6அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
7இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
8ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப்பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.
9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
11அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
12அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா)
14அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com